/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துவக்க பள்ளி ஆண்டு விழாவில் பழங்குடியின மாணவிக்கு நிதி உதவி
/
துவக்க பள்ளி ஆண்டு விழாவில் பழங்குடியின மாணவிக்கு நிதி உதவி
துவக்க பள்ளி ஆண்டு விழாவில் பழங்குடியின மாணவிக்கு நிதி உதவி
துவக்க பள்ளி ஆண்டு விழாவில் பழங்குடியின மாணவிக்கு நிதி உதவி
ADDED : ஏப் 02, 2025 10:05 PM

பந்தலுார்; 'பந்தலுார் அருகே பென்னை பள்ளி ஆண்டு விழாவில், நர்சிங் கல்லுாரியில் படிக்கும் பழங்குடி மாணவிக்கு மாதம் தோறும் நிதி உதவி வழங்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது.
பந்தலுார் அருகே பென்னை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
முன்னதாக, பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசையுடன், பெற்றோர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்ற கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, தலைமை ஆசிரியர் முருகேசன் ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் பீனா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் வாசுகி முன்னிலை வகித்து பேசுகையில், ''வனத்திற்கு மத்தியில் செயல்பட்ட இந்த பள்ளி தற்போது, வெளிப்பகுதியில் செயல்பட்டு வருவதுடன், முழுமையாக பழங்குடியின மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. விரைவில் பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
டி.எஸ்.பி., ஜெயபாலன் பேசுகையில்,''பழங்குடியின மக்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதை தவிர்த்தால் மட்டுமே, குழந்தைகள் தினசரி பள்ளிக்கு வரவும், படித்து வாழ்வில் உயரவும் வழி ஏற்படுத்தும்,'' என்றார்.
கோவை வேளாண் பல்கலைக்கழக இணை இயக்குனர் சங்கரநாராயணன், பள்ளியில் படிக்கும் அனைத்து பழங்குடியின மாணவர்களுக்கும் புத்தக பை மற்றும் எழுது பொருட்களை வழங்கி பேசுகையில், ''வாழ்வின் அடித்தட்டில் இருக்கும் பழங்குடியின மக்கள், தங்கள் குழந்தைகளை தினசரி பள்ளிக்கு அனுப்பி கல்வியில் மேம்பட செய்தால் மட்டுமே, அழிவின் பிடியிலிருந்து சமுதாயத்தை காப்பாற்ற முடியும். அதற்கான ஒத்துழைப்பை பெற்றோர் வழங்க வேண்டும். பிளஸ்-2 முடித்துவிட்டு நர்சிங் கல்லுாரியில் படிக்கும் பழங்குடி மாணவி, ஸ்ரீதேவியின் படிப்பு தடைபடாமல் இருக்க மாதம்தோறும், தனது சம்பளத்திலிருந்து, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்,'' என்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி பேசுகையில், ''குடும்பத்தில் பெற்றோர் நல்ல சூழலில் இருந்தால் மட்டுமே, குழந்தைகள் நல்லவர்களாக வளர முடியும். அரசு பள்ளிகளில் பழங்குடியின மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரும் நிலையில், படிப்பதில் இடைநிற்காமல் தொடர வேண்டும்,'' என்றார்.
'ஈகை பவுண்டேஷன்' சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மாநில ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் உமா சங்கர், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீரா, தலைமை ஆசிரியர்கள் புஷ்பா தேவி, மல்லேசன், சக்திவேல் உள்ளிட்டோர் பேசினர். பழங்குடியின மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. ஆசிரியர் ரோஸ்மேரி நன்றி கூறினார்.

