/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் கோவிலில் ஐந்து ஜோடிகளுக்கு திருமணம்
/
மாரியம்மன் கோவிலில் ஐந்து ஜோடிகளுக்கு திருமணம்
ADDED : அக் 21, 2024 11:15 PM

ஊட்டி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஐந்து ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறையின், சட்டமன்ற மானிய கோரிக்கையில், 'பொருளாதாரத்தில் பின்தங்கிய, 700 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக, 4 கிராம் தங்க தாலி உட்பட, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்,' என, அறிவிக்கப்பட்டது. மேலும், 'தகுதியானவர்கள் அந்தந்த மாவட்டத்தில் விண்ணப்பித்து இந்த திட்டத்தில் பயன்பெறலாம்,' எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி மாரியம்மன் கோவிலில், 5 ஜோடிகளுக்கு திருமணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. 5 ஜோடிகளும் புத்தாடையுடன் மாலை அணிந்து அமர்ந்திருந்தனர். தொடர்ந்து, வேதமந்திரங்கள் ஓதப்பட்டு மணமகன்கள், மணமகள்களின் கழுத்தில் தாலியை கட்டினர். திருமணம் முடிந்ததும் மணமகன்கள், மணமகள்களின் கால்களில் மெட்டி அணிவித்தனர்.
முன்னதாக, கலெக்டர் லட்சுமி பவ்யா கலந்துகொண்டு அவர்களுக்கு தாலி எடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். பின், மணமக்களுக்கு பீரோ உட்பட பல்வேறு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.