ADDED : செப் 07, 2026 09:17 PM
ஊட்டி: ஊட்டியில் மூடப்பட்ட எச்.பி.எப்., தொழிற்சாலையில் வெள்ளி மண் திருடிய வழக்கில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி எச்.பி.எப்., பகுதியில் செயல்பட்டு வந்த, மத்திய அரசின் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை, நிதி நெருக்கடி மற்றும் உற்பத்தி பாதிப்புகளால் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதையடுத்து, தொழிற்சாலை வளாகத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து மண் மற்றும் கற்களை அகற்றி விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்து வந்தன.
குறிப்பாக, தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மண்ணில் தங்கம் மற்றும் சில்வர் நைட்ரேட் கலந்த வெள்ளி துகள்கள் கலந்திருப்பதாக நம்பப்பட்டதால், சிலர் அந்த மண்ணை சட்டவிரோதமாக அள்ளிச் சென்று விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஊட்டியில் இருந்து கடத்தப்படும் மண் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வெள்ளி பிரித்தெடுக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. புலி உள்ளிட்ட ஆபத்தான மிருகங்கள் இருக்கும் இடங்களில் இரவு நேரங்களில் உயிரை பணயம் வைத்து இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாக, 40-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். எனினும், கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
தற்போது, மீண்டும் ஒரு கும்பல், ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலையில், வெள்ளி கலந்த, 7 மூட்டை மணலை திருடி வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்தது. வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை மீண்டும் எடுத்து, கோவைக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது போலீசார் இந்த கும்பலை சேர்ந்த சுரேஷ், 46, மணிவண்ணன்,34, சதீஷ்,32, வினோத்குமார், 22, மற்றொரு சதீஷ், 36, ஆகிய, 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே வெள்ளி மண்ணை வாங்கிய முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் உட்பட பலரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
