ADDED : செப் 07, 2026 09:17 PM
ஊட்டி: வறட்சி பாதிப்பால் கால்நடைகள் இறப்பதை தடுக்க மானிய விலையில், பசுந்தீவனம் வழங்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் கொடுத்த மனு:
கடந்த, 2024-ம் ஆண்டு நீலகிரியில் பருவமழை பொய்த்ததால், கடுமையான வறட்சி ஏற்பட்டு மசினகுடி, மாயார் பகுதிகளில் பல நாட்டு மாடுகள் மற்றும் பசுக்கள் உயிரிழந்தன. இந்த நிலையில் தற்போது ‘எல் நினோ ’ பாதிப்பு காரணமாக, மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
சரியான மழை இல்லாததால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் இல்லாமல் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், மானிய விலையில் பசுந்தீவனம் மற்றும் சைலேஜ் வகை ஊறுகாய் புற்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
