/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீரோடையை மண் போட்டு மூடுவதால் பேரிடர் அபாயம்
/
நீரோடையை மண் போட்டு மூடுவதால் பேரிடர் அபாயம்
ADDED : டிச 20, 2025 08:52 AM

குன்னுார்: குன்னுாரில், 'புரூக் லேண்ட்' பகுதியில் நீர் வழித்தடம் தடுக்கும் வகையில் நீரோடை மூடப்படுவதால், பேரிடர் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் நீர், மலைகள், வனங்கள் கடந்து நீரோடையாகவும், ஆறுகளாகவும் மாறி. சமவெளி பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.
சமீபகாலமாக மாவட்டத்தில் வனப்பகுதிகளுக்குள் உள்ள நிலங்கள் அழித்து சாலை அமைக்கப்படுகிறது. பல இடங்களில் தோட்டங்களாக மாற்றப்பட்டு, கட்டட காடுகளாக மாறி வருகிறது.
இதனால், ஏற்படும் பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க, பொக்லைன், டிராக்டர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உடந்தையுடன் விதிமீறல்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், குன்னுாரில், புரூக் லேண்ட் பகுதியில் உள்ள நீரோடையில் மண் கொட்டப்பட்டு நீர் வழித்தடம் தடுக்கப்பட்டு வருகிறது. இதனால், மழை காலங்களில் நீர் வழித்தடம் மாறி அருகில் உள்ள குடியிருப்புகளில் பேரிடர் ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு விதிமீறல்களை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள நீ ரோடையை தன்னார்வ அமைப்பினர் சுத்தம் செய்தனர்.
' பட்டா நிலம்,' என கூறி அதில் உள்ள நீர் வழித்தடங்கள் தடுப்பதால், மாற்றுவழியில் நீர் சென்று அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நீர் வழித்தடங்களை பாதுகாப்பதுடன், விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில்,'' இது தொடர்பாக புகார் வந்துள்ளது. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.

