/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெளுத்து வாங்கிய மழையால் வெள்ளம்; அறிவிப்பை மீறி தாவரவியல் பூங்கா திறப்பு
/
வெளுத்து வாங்கிய மழையால் வெள்ளம்; அறிவிப்பை மீறி தாவரவியல் பூங்கா திறப்பு
வெளுத்து வாங்கிய மழையால் வெள்ளம்; அறிவிப்பை மீறி தாவரவியல் பூங்கா திறப்பு
வெளுத்து வாங்கிய மழையால் வெள்ளம்; அறிவிப்பை மீறி தாவரவியல் பூங்கா திறப்பு
ADDED : ஆக 06, 2025 06:56 AM

ஊட்டி: ஊட்டியில் நேற்று பெய்த கனமழையால் படகு இல்லம் சாலையில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது; மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி, தாவரவியல் பூங்கா செயல்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்வதால், வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலர்ட்' அறிவிப்பு விடுத்துள்ளது. இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி, நேற்று முன்தினம் இரவு,'5ம் தேதி (நேற்று) ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை; அனைத்து சுற்றுலா தலங்கள் மூடப்படும்,' என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று காலை வனத்துறையின் கீழ் உள்ள சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் படகு இல்லம் மூடப்பட்டு இருந்தது. அதே நேரம், தோட்டக்கலை துறையின் கீழ் இயங்கிய, அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை திறக்கப்பட்டன. சுற்றுலா பயணிகளும் சென்றனர்.
காலை, 11:00 மணி அளவில் கன மழை துவங்கி இரண்டு மணி நேரம் வெளுத்து வாங்கியது. ஊட்டி கார்டன்சாலை சேறும் சகதியானது. படகு இல்லம் சாலையை வெள்ளம் சூழ்ந்தது. உள்ளூர் நகர பஸ்கள் இரண்டு மணிநேரம் வேறு பாதையில் திரும்பி விடப்பட்டன.
ரயில் நிலையம் அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனை மழை வெள்ளம் சூழ்ந்தது. போலீசார் திணறினர். ஊட்டி தாவரவியல் பூங்காவில், சுற்றுலா பயணிகள் பூங்காவில் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த ஏராளமான மரங்கள் உள்ளன. பலத்த காற்றுடன் மழை பெய்யும் போது மரக்கிளைகள் விழும் அபாயம் உள்ளது. இது போன்ற அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், 'சுற்றுலா மையங்களை மூட வேண்டும்,' என்ற மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி, பூங்கா செயல்பட்டது வியப்பளிப்பதாக உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
ஊட்டி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பீபிதா கூறுகையில்,'' நேற்று காலையில் மழை இல்லாததால், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பூங்காவை திறந்தோம்,'' என்றார்.