/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் பலாப்பழ சீசன்; வனத்துறை எச்சரிக்கை
/
கூடலுாரில் பலாப்பழ சீசன்; வனத்துறை எச்சரிக்கை
UPDATED : மே 26, 2025 11:14 PM
ADDED : மே 26, 2025 10:34 PM

கூடலுார்,; கூடலுாரில் பலாப்பழசீசன் துவங்கி உள்ள நிலையில், அதனை தேடி காட்டு யானைகள் வர வாய்ப்புள்ளதால், வீடுகள் அருகே, பலா மரங்களில் உள்ள பலாப்பழங்களை அகற்ற வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பலாப்பழ சீசன்
கூடலுாரில், மே, ஜூன் மாதங்களில் பலாப்பழ சீசன் துவங்கிவிடும். பலாப்பழம் யானைகளின் விருப்ப உணவு என்பதால், அதனை தேடி காட்டு யானைகள் குடியிருப்பை நோக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு வரும் யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.
எதிர்ப்பு
இதனை தடுக்க, வனத்துறையினர் வீடுகள் அருகே, உள்ள பலா மரங்களில், பலா காய்களை அகற்றி வருகின்றனர். எனினும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலாகாய்களை அகற்றவில்லை.
தற்போது, பலாப்பழ சீசன் துவங்கி உள்ள நிலையில், வியாபாரிகள் அதனை பறித்து, சாலையோரங்களில் வைத்து, சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
யானைகளால் ஆபத்து
இந்நிலையில், பலாப்பழங்களைத் தேடி அதிகளவில் காட்டு யானைகள் வரத்துவங்கியுள்ளது. யானைகளால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வீடுகள் அருகே உள்ள பலாமரங்களில் பலாப்பழங்களை உடனடியாக அகற்ற அறிவுறுத்தி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'பலாப்பழம் யானைகளுக்கு மிக விருப்ப உணவாகும். பலாப்பழம் சீசன் காலங்களில் அதனை தேடி காட்டு யானை குடியிருப்புக்குள் வருவதை தடுக்க, வீடுகள் அருகே உள்ள பலா காய்களை நாங்களே அகற்றி வருகிறோம்.
அகற்றாத இடங்களில் பலாப்பழம் தேடி வரும் காட்டு யானைகளால், மனித - யானை மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, வீடுகள் அருகே, மரங்களில் உள்ள பலாப்பழங்களை மக்கள் தாங்களாகவே அகற்ற வேண்டும். காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியும்,' என்றனர்.