/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீல மலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வறட்சியால் காட்டுத்தீ அபாயம்! சமூக விரோதிகளால் கருகும் வனத்தை காப்பது அவசியம்
/
நீல மலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வறட்சியால் காட்டுத்தீ அபாயம்! சமூக விரோதிகளால் கருகும் வனத்தை காப்பது அவசியம்
நீல மலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வறட்சியால் காட்டுத்தீ அபாயம்! சமூக விரோதிகளால் கருகும் வனத்தை காப்பது அவசியம்
நீல மலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வறட்சியால் காட்டுத்தீ அபாயம்! சமூக விரோதிகளால் கருகும் வனத்தை காப்பது அவசியம்
ADDED : பிப் 25, 2025 09:56 PM

பந்தலுார்; நீலகிரி மாவட்டத்தில், வறட்சியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பசுமையான வனப்பகுதிகள், காட்டுத் தீயில் கருகும் அபாயம் அதிகரித்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில், நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. 5,520 ச.கி.மீ., பரப்பளவை கொண்ட இந்த பகுதியில் புலவெளி; மழை காடுகள் மற்றும் சதுப்பு நிலப்பகுதிகள் அதிகளவில் உள்ளன.
இங்கு, 3,300 வகையான பூக்கும் தாவரங்கள், 175 வகையான ஆர்கிட்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பாலுாட்டிகள், 350 வகையான பறவை இனங்கள், 80 வகை ஊர்வன மற்றும் நீர் நில வாழ் உயிரினங்கள், 300 வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன.
இங்குள்ள வனப்பகுதிகள் பல்வேறு காரணங்களால் அழிக்கப்ட்டு வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் வனப்பகுதிகளை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கோடை காலத்தின் தாக்கம்
இந்நிலையில், தற்போது கோடைகாலம் துவங்கி உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பசுமையான வனப்பகுதிகள் காய்ந்து வறட்சியின் பிடியில் சிக்கி வருகின்றன. இதனால், வன விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதுடன், வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.
இதனை பயன்படுத்தும் சில சமூக விரோதிகள், வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களின் பரப்பை அதிகரிக்க வேண்டி, வனப்பகுதிகளுக்கு தீ வைத்து அழிக்கும் செயலை துவக்கி உள்ளனர்.
இதனால், வனவிலங்குகள், பறவைகள், ஊர்வன போன்ற வன உயிரினங்கள் அவற்றின் வாழ்விடங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிறப்பு பணியாளர்கள் இல்லை
பொதுவாக, கோடை காலங்களில் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக, தற்காலிகமாக சிறப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.
ஆனால், சமீப காலமாக இந்த நடைமுறை பின்பற்றாத நிலையில், தற்போது பணியில் இருக்கும் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை ஊருக்குள் வராமல் கண்காணிக்கும் பணியில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.
தற்போது, நீலகிரி மாவட்டத்தில், கூடலுார், பந்தலுார் பெருங்கரை உட்பட சில வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி, கருமை நிறமாக மாறி உள்ளது. இதை தவிர, ஊட்டி, குன்னுார் பகுதிகளிலும், இதுவரை, 6 ஏக்கர் பரப்புக்கு வனப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது சமூக விரோதிகளால் ஏற்பட்ட பாதிப்பாகும்.
காட்டுத்தீ பரவுவதால் வெறும் வனப்பகுதி மட்டும் பாதிப்பதில்லை. மாறாக, சிறிய வன விலங்குகள்; ஊர்வன வகைகள்; பறவைகள் அதன் முட்டைகள் அழிந்து வருகின்றன. வனப்பகுதிகளில் வறட்சி; வெப்பம் அதிகரித்து, உணவு பற்றாக்குறை ஏற்படும்போது, வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி வருவதால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்
கோடையில் நிலவும் இது போன்ற பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுப்பதுடன், வனத்துக்கு தீ வைக்கும் சமூக விரோதிகளை கண்காணிக்க தனி குழுவை நியமிக்க வேண்டியது அவசியம்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நீலகிரியில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சில இடங்களில் வனத்தீ ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, வனப்பகுதிக்கு தீ வைப்பது குற்றமாகும். அத்தகைய செயலில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.