ADDED : செப் 06, 2026 04:22 PM
பந்தலூர்:
பந்தலூரில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில், 200 பேர் பங்கேற்று பயன் அடைந்தனர்.
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஷாலோம் சாரிடபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் இணைந்து பந்தலூரில், இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் முகாமினை நடத்தினார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார். ஊட்டி அரசு மருத்துவமனை கண் மருத்துவர் திலீப் மணிகண்டன் தலைமை வகித்து, கண் பரிசோதனை மற்றும் கண்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பார்வை திறனை சீராக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, நடந்த முகாமில் டாக்டர் திலீப் மணிகண்டன் தலைமையிலான மருத்துவ குழுவினர், கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள். கண்புரை அறுவை சிகிச்சைக்காக, 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 30 பேருக்கு கிட்ட பார்வை குறைபாட்டிற்கான இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவசுப்பிரமணியம் தலைமையில், டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் விஜயன் சாமுவேல், பொது சேவை மைய தலைவர் நவ்ஷாத், இந்திரஜித், லட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
