/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் அமர்க்களம்
/
விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் அமர்க்களம்
ADDED : ஆக 31, 2025 08:22 PM

ஊட்டி; நீலகிரி மாவட்டம் முழுவதும் விநாயகர் விசர்ஜன உர்வலம் அமர்க்களமாக நடந்தது.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், 428 விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன.
பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஊட்டியில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. அதில், இந்து முன்னணி, சிவசேனா உட்பட பல்வேறு அமைப்புகளின் சிலைகள் ஜீப், லாரிகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
நேற்று, மேளதாளம் முழங்க வாகனங்களில் விநாயகர் முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு வரப்பட்டு காமராஜர் அணைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இதேபோல, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில், விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் சிறப்பாக நடந்தது. இரு நாட்களில், 428 விநாயகர் சிலைகள் அணையில் கரைக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்துார் வெற்றி ஊர்வலம் குன்னுாரில் பல்வேறு இடங்களிலும் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது. சிம்ஸ்பூங்காவில் துவங்கிய ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், லெப். கர்னல் (ஓய்வு) முருகானந்தம் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில், பிரம்மாண்ட பிரம்மோஸ், ரபேல் ஏவுகணை வடிவமைப்புகள் ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்டது. குன்னுார் லாஸ் நீர் வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டது.
கூடலுார் கூடலுார் பகுதியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் பொது கூட்டம் நடந்தது. தொடர்ந்து, மேளதாளம் முழங்க, விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் இரும்புபாலம் விநாயகர் கோவிலில் நிறைவு பெற்றது. அங்கு, கிரேன் பயன் படுத்தி விநாயகர் சிலைகள், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் உதவியுடன் பாண்டியார் - புன்னம்புழா ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
பந்தலுார் பந்தலுார் ஊர்வலத்தில் ஒன்றிய துனை தலைவர் பிரசாந்த் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், ஆர். எஸ். எஸ் .மாவட்ட தலைவர் சுந்தரம் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, சிலைகள் அனைத்தும் பந்தலூர், உப்பட்டி, நெல்லியாளம் வழியாக பொன்னானி மகா விஷ்ணு கோவிலையை ஒட்டிய ஆற்றங்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டது.
கோத்தகிரி கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் சிலைகள் வைக்கப்பட்டு, டானிங்டன் பகுதியில் இருந்து, காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், காம்பாய் கடை, தாலுாக அலுவலகம், ராமச்சந்த் வழியாக உயிலிட்டி நீர் வீழ்ச்சியில் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தை அனுமன் சேனா தேசிய தலைவர் சிட்கோ ராஜேந்திரன் துவக்கி வைத்தார். ஏராளமான தொண்டர்கள், 'ஓம் காளி - ஜெய் காளி' கோஷம் எழுப்பி ஊர்வலத்தில் பங்கேற்றனர். அனைத்து இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.