UPDATED : நவ 24, 2026 08:22 PM
ADDED : நவ 24, 2026 08:22 PM
பந்தலுார்: பத்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காலம் நிறைவு பெற்று தற்போது பனி காலம் துவங்கி உள்ளது.
காலை நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு, பகல் நேரத்தில் கடும் வெயில், இரவில் குளிர் என ஒரே நாளில் மூன்று விதமான காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில், பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில், தனியார் தேயிலை தோட்டங்களில் கடந்த மழையின் போது இடைவெளியை நிரப்ப புதிதாக தேயிலை நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்த நாற்றுகள், காலை நேர பனிப்பொழிவு, அதனை தொடரும் வெயில் போன்ற காலநிலையால், காயாமல் தடுக்கும் வகையில் 'கயோலின் பவுடர்' தெளிக்கப்பட்டு வருகிறது.
தனியார் தேயிலை தோட்ட அலுவலர் சுஜித் கூறுகையில்,‘‘தேயிலை தோட்டங்களில் இடைவெளியை நிரப்பும் வகையில், நடவு செய்யப்பட்ட தேயிலை நாற்றுகள் பனி, வெப்பத்தில் காய்ந்து போகாமல் தடுப்பதற்காக, கயோலின் பவுடர் தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேயிலை நாற்றுகள் அழியாமல் பாதுகாக்கவும், நீர்ப்பசையை தேவையான அளவிற்கு வைத்து கொள்ளவும் முடியும்,’’ என்றார்.
