சாலையோரம் மலைபோல் குப்பை மூட்டைகள்: சுகாதாரம் பாதிப்பால் கடும் அதிருப்தி
சாலையோரம் மலைபோல் குப்பை மூட்டைகள்: சுகாதாரம் பாதிப்பால் கடும் அதிருப்தி
UPDATED : நவ 24, 2026 07:56 PM
ADDED : நவ 24, 2026 07:54 PM

கூடலுார்:
கூடலுார் பார்வுட் அருகே சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குப்பை மூட்டைகளால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கூடலுார் ஓவேலி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் மட்கும் குப்பைகளை பார்வுட் அருகே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், இயற்கை உரம் தயாரிக்கும் பணிநடந்து வருகிறது. மீதமாகும் குப்பைகள் தேவர்சோலை பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு அனுப்பி வந்தனர். சில மாதங்களாக குப்பை அனுப்புவது நிறுத்தப்பட்டது.
இப்பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வந்த தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தை மீட்பதற்கான நடவடிக்கை இல்லாததால் குப்பை கொட்ட இடமின்றி, சேகரிக்கப்படும் குப்பைகள் மூட்டைகளாக கட்டப்பட்டு, சாலையோரம் மலைபோல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் உடல் நலம் பாதித்து வருகிறது.
சமூக ஆர்வலர்கள் கேதீஸ்வரன் கூறுகையில், ‘‘பேரூராட்சி பகுதியில் ஏற்கனவே, குப்பை கொட்டி வந்த பகுதி தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனை மீட்க முறையான எந்த நடவடிக்கைகளும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. சாலையோரம் குப்பை மூட்டைகள் அடுக்கி வைத்துள்ளதால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே,பேரூராட்சி நிர்வாகம் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,’’ என்றார்.
ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ‘‘அப்பகுதியில், உள்ள குப்பை மூட்டைகளை வேறு பகுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.
