/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலாவதி தேதி முடிந்தும் இயக்கப்படும் குப்பை லாரிகள்
/
காலாவதி தேதி முடிந்தும் இயக்கப்படும் குப்பை லாரிகள்
காலாவதி தேதி முடிந்தும் இயக்கப்படும் குப்பை லாரிகள்
காலாவதி தேதி முடிந்தும் இயக்கப்படும் குப்பை லாரிகள்
ADDED : நவ 18, 2024 09:28 PM
பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சியில், குப்பை லாரிகளின் தகுதி சான்று காலாவதியாகியும் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
வாகனங்கள் சாலையில் இயங்க துவங்கும் போது, அதற்கான அனைத்து தகுதி சான்றுகளும் பெற வேண்டும்.
டாக்சி வாகனங்கள் அல்லாத பிற வாகனங்கள் அனைத்திற்கும், 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுதி சான்று பெறுவதுடன், ஆண்டுதோறும் 'இன்சூரன்ஸ்' புதுப்பிக்கவும் வேண்டும்.
அரசு வாகனங்கள் பதிவு செய்யும் போது, ஆயுட்காலம் இன்சூரன்ஸ் பெறப்படுகிறது.
இந்நிலையில், நெல்லியாளம் நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக இயக்கப்படும் லாரிகள், தகுதிசான்று காலாவதியாகியும் இயக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
ஒப்பந்ததாரரிடம் ஒப்படைப்பு
கூடலுாரில் உள்ள தனியார் ஒருவர் மூலம், ஒப்பந்த முறையில் குப்பை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நகராட்சிக்கு சொந்தமான, மூன்று கனரக குப்பை லாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்த மூன்று லாரிகளும் தகுதி சான்று பெறுவதற்கான காலாவதி தேதி முடிந்தும் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த வாகனங்கள் இவ்வாறு இயக்கப்படுவது குறித்து, யாரும் கண்டு கொள்ளவில்லை.
மக்கள் கூறுகையில், 'தனியார் வாகன சான்றுகளை நாள்தோறும் ஆய்வு செய்யும் அதிகாரிகள், நகராட்சி வாகனங்களிலும் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதிலும், குப்பை லாரிகள் தகுதி சான்று காலாவதியான நிலையில் இங்குவதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.
நெல்லியாளம் நகராட்சி கமிஷனர் முனியப்பன் கூறுகையில்,'' இந்த வாகனங்கள் அனைத்தும், கூடலுாரை சேர்ந்த தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் தகுதி சான்று புதுபிப்பு உட்பட பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பின்பற்ற வேண்டும். இதற்கும் நகராட்சிக்கும் சம்பந்தம் இல்லை. எனினும் ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமார் கூறுகையில், ''இது குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. நான் நேரில் சென்று, நகராட்சியின் வாகனங்களை ஆய்வு செய்த பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.