/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; டிரைவருக்கு தர்ம அடி
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; டிரைவருக்கு தர்ம அடி
ADDED : ஜூன் 17, 2025 09:19 PM
ஊட்டி; ஊட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு, 13 வயதில் ஒரு ஆண் மற்றும் 11 வயதில் பெண் குழந்தை உள்ளது. தம்பதியினர் தனியார் வேலைக்கு செல்கின்றனர். அந்த, 11 வயது பெண் குழந்தையும், பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் ஒருவரின், 7 வயது மகளும் தோழிகளாக பழகி வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 11 வயது சிறுமி தனது தோழியான 7 வயது சிறுமியுடன் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் 7 வயது சிறுமியின் வீட்டுக்கு இருவரும் சென்றனர்.
அந்த டிரைவர் தன்னுடைய மகளின் கண்முன்னே, தோழியான 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பயந்து போன சிறுமி, உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்கள் டிரைவரை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.