/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அரசு ஐ.டி.ஐ.,
/
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அரசு ஐ.டி.ஐ.,
ADDED : அக் 14, 2025 08:56 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில் பழங்குடியின இளையோர்களுக்கான, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறையின் கீழ், அரசு தொழிற்பயிற்சி நிலையம் துவக்கப்பட்டது.
ஆனால், பழங்குடியின மக்களின் பங்களிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது அனைத்து பிரிவினரும் தொழில் கல்வி படிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
பெண்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டு, அனைத்து வயது பெண்களும் சேர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை வழங்கப்படும் பயிற்சியில் சேரும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வருகைக்கான உதவித்தொகை, 750 ரூபாய் வழங்கப்படுகிறது. புதுமை பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகையாக, 1,000 ரூபாய், இலவச சீருடை, காலணிகள், மிதிவண்டி, பாட புத்தகங்கள், வரைபடக் கருவிகள் வழங்கப்படுகிறது. அத்துடன் விடுதி வசதியும் உள்ள நிலையில், தற்போதும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
அத்துடன், 'மேக் இன் ஐ.டி.ஐ.,' திட்டம் மூலம் வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி தருவதுடன், மோட்டார் மெக்கானிக், பிட்டர், பிளம்பர், வயர்மேன், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
பயிற்சி நிலைய நிகழ்ச்சியில், முதல்வர் நவ்ஷாத் பேசுகையில்,''அனைத்து மாணவர்களும் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு பிரிவுகளின் கீழ் மாணவர் சேர்க்கை தற்போதும் நடைபெறுகிறது. வரும், 17ஆம் தேதி வரை சேர்க்கை நடைபெறும் நிலையில் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையில் பதிவு செய்யப்பட்ட, மேசன், எலக்ட்ரீசியன், பெயிண்டர் போன்ற பணிகளுக்கான பயிற்சியும், தினசரி காலை, மாலை தேநீர் மற்றும் மதிய உணவு, நாள்தோறும், 800 ரூபாய் உதவி தொகையுடன் ஏழு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
எனவே, மாணவர்கள் மட்டுமின்றி, வயதானவர்களும் பயிற்சி பெற்று அரசு சான்றிதழை பெறுவதற்கு பயிற்சிக்கு நேரில் அணுகி பயன் பெறலாம்,'' என்றார்.