/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை மாவட்ட வனப்பகுதியை முற்றுகையிட்டுள்ள வேட்டையர்கள்? மான், காட்டெருமையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை
/
மலை மாவட்ட வனப்பகுதியை முற்றுகையிட்டுள்ள வேட்டையர்கள்? மான், காட்டெருமையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை
மலை மாவட்ட வனப்பகுதியை முற்றுகையிட்டுள்ள வேட்டையர்கள்? மான், காட்டெருமையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை
மலை மாவட்ட வனப்பகுதியை முற்றுகையிட்டுள்ள வேட்டையர்கள்? மான், காட்டெருமையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை
ADDED : ஏப் 01, 2025 11:11 PM

பந்தலுார் : நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காட்டெருமைகளின் உயிருக்கு குறி வைக்கும், தமிழக- கேரளா வேட்டை கும்பலால், வனத்துறைக்கு பெரும் சவாலான சூழ்நிலை உருவாகி வருகிறது.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில், 100 வகை பாலுாட்டிகள்; 350 வகையான பறவை இனங்கள்; 80 வகை ஊர்வன இனங்கள்; 334 வகை வண்ணத்து பூச்சிகள்; 39 வகை மீன்கள் உள்ளன.
இவற்றில், சமீப காலமாக வேட்டை கும்பலிடம் சிக்கி காட்டெருமைகள் அதிகளவில் இரையாகி வருகின்றன. அதில், கேரளா மற்றும் உள்ளூர் பகுதிகளை சேர்ந்த வேட்டை கும்பல், நீலகிரி வனப்பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளை, துப்பாக்கியால் சுட்டு அதனை இறைச்சியாக மாற்றி, வாகனங்களில், கேரளா, கர்நாடகா மாநிலத்துக்கு எடுத்து சென்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக, ஏற்கனவே வனத்துறைக்கு புகார் உள்ளது.
சுற்றுலா பயணிகள் போல் வருகை
கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் சுற்றுலா பயணிகளை போல் வரும் வேட்டை கும்பல், வேட்டைக்கு பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வாகனங்களை எடுத்து வருவதுடன், நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும், வாகனங்களில் மறைத்து எடுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.
இவர்கள், நீலகிரி மாவட்டத்துக்குள் வருவதற்கு, கூடலுார் அருகே நாடுகாணியில் செயல்படும் வனத்துறை மற்றும் போலீஸ் சோதனை சாவடிகள்; மேல் கூடலுார் வன சோதனை சாவடி அல்லது தொரப்பள்ளி சோதனை சாவடிகளை கடந்து வர வேண்டும். அதேபோல, வேட்டைக்கு பின், இறைச்சியை இதே சோதனை சாவடிகளின் வழியாக கொண்டு செல்ல வேண்டும்.
உள்ளூரில் ஆயுதங்களுடன் கைது
நீலகிரியில் பல பகுதிகளில் காட்டெருமை வேட்டைக்கு வருபவர்களை, வனத்துறை கைது செய்யும் போது, அவர்களிடம், அனுமதி இல்லாத துப்பாக்கி, தோட்டாக்கள், அதிகளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அப்படியெனில், மாவட்ட எல்லைகளில் நடக்கும் சோதனையை மீறி, இவர்கள் எவ்வாறு, கூடலுார், பந்தலுார், ஓவேலி, ஊட்டி, குன்னுார், எடக்காடு பகுதிகளுக்கு வேடையாட வர முடியும்.
சமீப காலத்தில், ஓவேலி, குன்னுார் காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில், காட்டெருமைகளை வேட்டையாடிய ஒரு வழக்கில், கூடலுாரை சேர்ந்த சில அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இரு நாட்களுக்கு முன்பு, எடக்காடு பகுதியில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பிடிப்பட்டது. மூவர் தப்பினர். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் மட்டும் கைது செய்யப்பட்டார். இதே நிலையில் தொடர்ந்தால், நீலகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக கொல்லப்படும் மான், காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சேரம்பாடியை சேர்ந்த சமூக ஆர்வலர் அம்சா கூறுகையில்,''நம் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில், கேரளா, கர்நாடக வாகனங்களில் சோதனை நடத்த வேண்டும். குறிப்பாக, இரவில் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும்.
இதற்கான போலீசார்; வனத்துறையின் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு தனி குழுவை அமைக்க வேண்டும். இங்கு கைதாகும் வேட்டைகாரர்களுக்கு, உள்ளூரில் உள்ள தொடர்புகள் குறித்து அறிந்து, குறிப்பிட்ட நபர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வேட்டையை கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில்,'' தற்போது, நீலகிரி மாவட்ட வன அலுவலர்கள் மற்றும், கேரளா நிலம்பூர் வன அலுவலர்கள் இணைந்து கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதன் காரணமாக தான் வேடையாடுவதற்கு முன்பே, வேட்டை கும்பல் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். எனினும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். பொது மக்களும் இது குறித்து தகவல் தெரிவித்து உதவினால், அவர்களின் பெயர் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்,'' என்றார்.