ADDED : மே 20, 2025 07:02 AM

கூடலுார் : நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி வாழை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், 38. இவர் மனைவி கார்த்தியாயினி,34. இவர்கள் இருவரும், கட்டட வேலை செய்து வந்தனர். குடும்ப வாழ்க்கை தொடர்பாக தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த, 17ம் தேதி, இருவரும் ஊட்டிக்கு கட்டட வேலைக்கு சென்று விட்டு, மாலை வீடு திரும்பியுள்ளனர்.
அன்று, இரவு தினேஷ்குமார் கீழே விழுந்து இறந்து விட்டதாக, மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மசினகுடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், 'சந்தேக மரணம்' என, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். தினேஷ்குமார், உடல் ஊட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 'சம்பவத்தன்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரம் அடைந்த கார்த்தியாயினி, கணவர் தினேஷ்குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்து, விட்டு நாடகமாடி உள்ளார்,' என்பது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் கார்த்தியாயினியை கைது செய்தனர்.