/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
/
ஊட்டியில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
ADDED : பிப் 15, 2025 07:07 AM

ஊட்டி; '' ஊட்டி அருகே காட்டுக்குப்பை பகுதியில், 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய நீர் மின் திட்டப்பணிகள் டிச., மாதம் நிறைவடையும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் ராதா கிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, பிரகாஷ், அசோகன் ஆகியோர் நேற்று ஊட்டியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், ஊட்டி அருகே காட்டுக்குப்பை பகுதியில் குந்தா மெகா நீரேற்று புனல் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர். பின், பாலாடாவில் உள்ள ஏகலைவா பள்ளி மற்றும் விடுதி; ஊட்டி ஏரி துார் வாரும் பணிகளை ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் நிருபர்களிடம் கூறுகையில், '' ஊட்டி அருகே காட்டுக்குப்பை பகுதியில், 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய நீர் மின் திட்டப்பணிகளை ஆய்வு செய்தோம்.
கடந்த, 6 ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன. ஜூன் மாதம் பருவ மழை தொடங்கும் முன்பு அணையில் உள்ள கான்கிரீட் பணிகளை நிறைவு செய்ய அறிவுறுத்தியுள்ளோம். டிச., மாதம் இந்த மின் திட்ட பணிகள் நிறைவடையும்.
ஊட்டி ஏரியில் துார் வாரும் பணி கடந்த நான்கு மாதங்களாக நடந்து வருகிறது. 18 மாதங்களுக்குள் துார் வாரும் பணி நிறைவு செய்ய வேண்டும். இந்த பணிக்காக, 20 சதவீதம் தொகையை உயர்த்த ஒப்பந்ததாரர் கோரியுள்ளார்,'' என்றார்.
ஆய்வின் போது, தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதன்மை செயலாளர் சீனிவாசன், கலெக்டர் லட்சுமி பவ்யா, கூடுதல் கலெக்டர் கவுசிக் உட்பட பலர் உடனிருந்தனர்.