/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டம் முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலம்
/
மாவட்டம் முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலம்
ADDED : ஆக 15, 2025 08:40 PM

-நிருபர் குழு-
நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், பள்ளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
குன்னுார் உபதலை ஆலோரை கிராமத்தில், ஆலோரை ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நடந்த விழாவுக்கு, ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் சதீஷ்குமார் தேசிய கொடியை ஏற்றினார்.
அருவங்காடு உதயம் நகர் சமத்துவ நல சங்கம் சார்பில் நடந்த விழாவில், சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றினார். செயலாளர் ஜெயராமன், பொருளாளர் ரிச்சர்டு முன்னிலை வகித்தனர்.
* குன்னுாரில் பா.ஜ., சார்பில் தேசிய கொடி பேரணி நடந்தது. மார்க்கெட் பகுதியில் சமூக ஆர்வலர்கள் சார்பில் நடந்த கொடியேற்று விழாவில், சமூக சேவகி மோலி தேசிய கொடியேற்றினார்.
வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினீத் பாபா சாகிப் லோட்டே, கொடியேற்றினார். பேரக்ஸ், பிளாக் பிரிட்ஜ் ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் சின்ன வண்டிச்சோலை கிராமத்தில், கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் தேசியக்கொடி ஏற்றினார்.
கிளீன் குன்னுார் சார்பில் ஓட்டுப்பட்டறை குப்பை மேலாண்மை பூங்காவில், தூய்மை பணியாளர்கள், பிச்சைமுத்து, சண்முகம், சதாசிவம் ஆகியோர் தேசிய கொடியேற்றினர். குன்னுார் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் குமார், வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் ரவீந்திரநாத் தேசிய கொடியேற்றினர்.
* குன்னுார் சமூக ஆர்வலர்கள் சார்பில், ஹெல்ெமட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில், கோத்தகிரி ஓரசோலை காமராஜ் நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பெருமாள்,60, என்பவர் பின்னோக்கி நடந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இன்ஸ்பெக்டர் அன்பரசு துவக்கி வைத்தார்.
* ஊட்டி கிரசன்ட் பள்ளி சார்பில், மக்களுக்கான போதையில்லா எதிர் காலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலைகுந்தா முதல், தாவரவியல் பூங்கா வரை, 10 கி.மீ., துார சைக்கிள் பேரணி நடந்தது. அதில், 200 மாணவர்கள் கொட்டும் மழையிலும் ஆர்வமாக பங்கேற்று நகரின் பகுதிகளிலும் வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் உமர் பரூக், விளைாட்டு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
* கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில், அப்துல் கலாம் ஆடவர் சுய உதவி குழு சார்பில் நடந்த விழாவில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜ்குமார் தேசிய கொடியேற்றினார். ஆடவர் சுய உதவி குழு நிர்வாகிகள் செந்தில்குமார் லோகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூடலுார் கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த விழாவில் ஆர்.டி.ஓ., குணசேகரன் தேசிய கொடி ஏற்றினார். தாசில்தார் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாசில்தார் முத்துமாரி தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து, ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் கிளை சிறைக்கு சென்று கைதிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
* மாக்கமூலா பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் நடந்த விழாவில், உதவி வன பாதுகாவலர் துஷார் ஸ்ரீஹரி ஷிண்டே தேசியக்கொடி ஏற்றினார். வன ஊழியர்கள் அணிவகுத்து நின்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில், நகராட்சி தலைவர் பரிமளா தேசிய கொடி ஏற்றினார்.
* கூடலூர் பா.ஜ., அலுவலகத்தில் நடந்த சுதந்திரதின விழாவில், மண்டலதலைவர் பாலன் தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து, நடந்த ஊர்வலத்தில் பா.ஜ.,வினர், தேசிய கொடியுடன் பங்கேற்றனர்.
பந்தலுார் பந்தலுார் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சிராஜுநிஷா தேசிய கொடியேற்றினார். வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பங்கேற்றனர். குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகரன் தேசியக்கொடி ஏற்றினார். அதில், வக்கீல்கள் அப்சல்ஜா, சிவசுப்ரமணியம், கணேசன், சவுகத், மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
* பந்தலுார் அருகே செம்மண் கிராமத்தில் நடந்த விழாவில், கவுன்சிலர் ரமேஷ் தேசிய கொடி ஏற்றினார். வக்கீல் மோகன்ராஜ், கிராம நிர்வாகி ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். கப்பலா ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் கனையேந்திரன்தேசிய கொடி ஏற்றினார்.
அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் முன்னாள் ராணுவ வீரர் ஜார்ஜ் டேவிட் தேசிய கொடி ஏற்றினார். மனோஜ்குமார், அன்பரசி உள்ளிட்ட ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

