/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அவசியம்
/
எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அவசியம்
ADDED : ஜூலை 14, 2025 08:48 PM

கூடலுார்; 'தமிழக- கேரளா எல்லையான, நாடுகாணியில் போலீஸ் உள்ளிட்ட அரசு துறைக்கான ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் கேரளா, கர்நாடக வனத்துறை சோதனை சாவடிகள்; வாகன நுழைவு வரி வசூல் மையம்; பிளாஸ்டிக் சோதனை மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
அதில், தமிழக-கேரளா எல்லையான நாடுகாணியில், வனத்துறை சோதனை சாவடியும், அதன் முன் பகுதியில், போலீசார் போதுமான வசதி இன்றி தற்காலிகமாக செட் அமைத்து வாகன சோதனை பணிகள் நடக்கிறது.
அங்கிருந்து, 200 மீட்டர் தொலைவில் வாகன நுழைவு வரி வசூல் மையம் 'பிளாஸ்டிக்' சோதனை மையம், தற்காலிக சுகாதார சோதனை மையம் செயல்பட்டு வருகிறது. 1.5 கி.மீ., தொலைவில், வாடகை கட்டடத்தில் மோட்டார் வாகன சோதனை மையம் செயல்பட்டு வருகிறது.
இதனால், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள், சோதனைக்காக மூன்று இடங்களில் நின்று பயணத்தை தொடரும் நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண, ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மையங்களை அமைக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசு துறையினர் கூறுகையில், 'இச்சாலையில் வனத்துறைக்கு மட்டும் நிரந்தர கட்டடம் உள்ளது. போலீஸ் மற்றும் துறைகள் ஊழியர்கள் போதுமான வசதி இல்லாத, தற்காலிக செட்டில் பணி செய்வது மழை காலத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'கேரளாவிலிருந்து நீலகிரி மற்றும் கர்நாடக செல்லும் வாகனங்கள், சாலையில், மூன்று இடங்களில் உள்ள சோதனை சாலைகளில், நின்று பயணிக்க வேண்டி உள்ளது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பல்வேறு சிரமங்களையும் சந்திக்க வேண்டி உள்ளது. இதற்கு தீர்வாக, ஒரே இடத்தில் அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளும் வகையில், ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்க வேண்டும்,' என்றனர்.