ADDED : செப் 27, 2026 01:20 PM
ஊட்டி: -
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், தோடர் பழங்குடியின மொழியை பாதுகாக்கும் இணைய சான்றிதழ் படிப்பு சமூக ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடரின் மக்களின் மொழி, சமூகம் மற்றும் பண்பாட்டை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கில், சுய கற்றல் வழியிலான இணைய சான்றிதழ் பயிற்சி படிப்பு தொடங்கப்பட உள்ளது.
சென்னை சமூகப் பணி கல்லூரியின் சமூக நீதி மற்றும் சமத்துவ மையம், தோடர் மொழி மேம்பாடு பாதுகாப்பு சங்கம் மற்றும் தோடர் நல வாழ்வு சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து வடிவமைத்துள்ள இச்சான்றிதழ் படிப்பின் தோடர் சமுதாய கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
பழங்குடியின மக்களின் தனித்துவமிக்க மொழியையும் பண்பாடு அடையாளங்களையும் பாதுகாப்பது மிகவும் அவசியமானது. இத்தகைய நவீன இணைய சான்றிதழ் படிப்புகள், தோடர் மொழியின் முக்கியத்துவத்தை உலகறிய செய்யவும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவும் உதவியாக இருக்கும். என, தெரிவிக்கப்பட்டது.
இதில், தோடர் பழங்குடியின மக்கள், சமுதாயத் தலைவர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
