ADDED : செப் 27, 2026 02:10 PM
குன்னூர்: நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் செப்., 28 முதல் 30 வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், நடப்பு மாத சம்பளம், தினக்கூலி மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை மாத இறுதி நாளான 30ம் தேதிக்கு பதிலாக, முன்னதாகவே கடந்த 25ம் தேதியே மின்னணு பரிவர்த்தனை வாயிலாக வழங்க, கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குநர் அனைத்து அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு குறித்த காலத்தில் செப்., மாத ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே துறையின் கீழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பூங்காக்களில் இரவு பகலாக பணிபுரியும் நிரந்தர பூங்கா பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. பணியாளர்களிடையே கடும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தெளிவான அரசாணை இருந்தும், இதற்கான சம்பளம் வழங்கப்படாதது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. சம்பளத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூங்கா பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என,வலியுறுத்தப்பட்டுள்ளது.
