ADDED : அக் 24, 2025 11:33 PM

பந்தலூர் : பந்தலூரில் அயோடின் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பந்தலூர் தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில், கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவா மையம், ஆல் தி சில்ட்ரன் அமைப்பு இணைந்து, அயோடின் பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
பயிற்சி மைய ஆசிரியர் அம்பிகா வரவேற்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து, அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதன் அவசியம் மற்றும் அரசு மூலம் அயோடின் கலந்த உப்பு, மானிய விலையில் வழங்குவதை பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டியதுதான் அவசியம் குறித்து பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், உப்பில் அயோடின் பரிசோதனை செய்வது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டி பேசுகையில், மனித உடலுக்கு நுண்ணூட்ட சத்தாக உள்ளது அயோடின். கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பம் தரிக்கும் போது கருவில் உள்ள குழந்தை முதல், மனிதன் உயிர் வாழும் வரை அயோடின் அத்தியாவசியமாக உள்ளது.
அயோடின் பற்றாக்குறையால் தைராய்டு பாதிப்பு, உடல் வளர்ச்சி குன்றுதல், படிப்பில் கவனம் இன்மை மற்றும் குறை பிரசவம், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பிரச்சனைகள் ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எனவே உப்பு வாங்கும்போது அயோடின் கலந்த தரமான உப்பு வாங்கி பயன்படுத்தினால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் காந்தி சேவா மையம் அமைப்பாளர் நவ்ஷாத், பயிற்சி மைய முதல்வர் எபினேசர், சமூக ஆர்வலர் இந்திரஜித் மற்றும் பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் நன்றி கூறினார்.

