/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புலிகள் காப்பக மாற்றிட திட்டத்தில் முறைகேடு; பாதிக்கப்பட்ட மக்களிடம் குற்றப்பிரிவு போலீசார் நேரில் விசாரணை
/
புலிகள் காப்பக மாற்றிட திட்டத்தில் முறைகேடு; பாதிக்கப்பட்ட மக்களிடம் குற்றப்பிரிவு போலீசார் நேரில் விசாரணை
புலிகள் காப்பக மாற்றிட திட்டத்தில் முறைகேடு; பாதிக்கப்பட்ட மக்களிடம் குற்றப்பிரிவு போலீசார் நேரில் விசாரணை
புலிகள் காப்பக மாற்றிட திட்டத்தில் முறைகேடு; பாதிக்கப்பட்ட மக்களிடம் குற்றப்பிரிவு போலீசார் நேரில் விசாரணை
ADDED : அக் 24, 2024 08:47 PM

பந்தலுார்: முதுமலை புலிகள் காப்பக மாற்றிட திட்டத்தில் ஏற்பட்டுள்ள, முறைகேடுகள் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட புலியாளம், நாகம்பள்ளி, மண்டக்கரை, பென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மாற்று குடியமர்வு திட்டத்தின் கீழ் வெளியேற்றப்பட்டனர்.
இவர்களில் 'கோல்டன் ஷேக்' திட்டத்தின் கீழ்,10 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்ட பயனாளிகள் வெளியிடங்களில் சொந்தமாக இடங்களை வாங்கி குடியேற்றப்பட்டனர்.
மேலும், பலர் வனத்துறை அளித்த மாற்றிட திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
வெளியேறிய 137 குடும்பத்தினர்
அதில், 'பென்னை பகுதியில், 58 பழங்குடியின குடும்பத்தினர்; புலியாளம் பகுதியில், 12 குடும்பத்தினர்; நாகம்பள்ளியில், 19 குடும்பத்தினர்; மண்டக்கரை பகுதியில், 24 குடும்பத்தினர்,' என, மொத்தம், 137 பழங்குடியின குடும்பத்தினர் மாற்றிடத்துக்கு சென்றனர். இவர்களுக்கு மாற்றிட திட்டத்தின் கீழ், குனில்வயல், பாலாப்பள்ளி, பேபிநகர், போஸ்பரா, மச்சிக்கொல்லி, வட்டிக்கொல்லி, வெள்ளரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கு நிலம் பெற்று தந்ததில், அப்போது அங்கு பணியில் இருந்த வனச்சரகர் மற்றும் வனப்பணியாளர்கள், இடைத்தரகர்கள் என பலரும் ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது.
ஆவணங்களை இதுவரை தரவில்லை
கடந்த, 2019 ஆம் ஆண்டு போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு, எட்டு பேர் மீது, 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தற்போது ஊட்டி கோர்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அதில், 21 பழங்குடியின குடும்பத்தினர் மட்டுமே புகார் கொடுத்த நிலையில், மீதமுள்ள பழங்குடியின பயனாளிகளிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு புகார் மனுக்கள் மற்றும் ஆவணங்களை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பாலாப்பள்ளி பகுதியில் நடந்த விசாரணையில், 39 குடும்பங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரிடம் நேரில் கூறுகையில், 'பயனாளிகளுக்கான, 10 லட்சம் ரூபாய் தொகையில், மூன்று லட்சம் ரூபாய் அவர்களின் பெயரில் வைப்பு தொகையாக வங்கியில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மீதமுள்ள தொகையில் பெறப்பட்ட நிலங்களின் ஆவணங்களை தங்களிடம் வழங்காமல் புரோக்கர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் வைத்து கொண்டனர்.
மேலும், பல்வேறு காரணங்களை கூறி கூடுதலான தொகையினை தங்களிடம் ஏமாற்றி பெற்று கொண்டனர்,' என்றனர்.
புகார்களை பதிவு செய்த போலீசார் கூறுகையில், 'இது குறித்து, சம்பந்தப்பட்ட வனத்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு, தங்கள் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி கோர்ட்டின் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மோசடியில் வேறு ஏதேனும் தகவல்களை தெரிவிக்க விரும்பினால் பழங்குடியின மக்கள் அச்சமின்றி தெரிவித்து பயன்பெறலாம்,' என்றனர்.
இந்த விசாரணையின் போது, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க கூடலுார் ஒன்றிய செயலாளர் முகமதுகனி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், நிர்வாகிகள் குணசேகரன், சுரேஷ், தேவதாஸ் உள்ளிட்டோர், போலீசாரிடம் பல்வேறு தகவல்களை கூறினார்.

