/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தயாரிப்பு பணி அனைத்தும் கோவையில் நடப்பதால் தள்ளாடும் ஆவின் நிறுவனம்? தனியார் மற்றும் பிற மாநில பால் விற்பனை அதிகரிப்பு
/
தயாரிப்பு பணி அனைத்தும் கோவையில் நடப்பதால் தள்ளாடும் ஆவின் நிறுவனம்? தனியார் மற்றும் பிற மாநில பால் விற்பனை அதிகரிப்பு
தயாரிப்பு பணி அனைத்தும் கோவையில் நடப்பதால் தள்ளாடும் ஆவின் நிறுவனம்? தனியார் மற்றும் பிற மாநில பால் விற்பனை அதிகரிப்பு
தயாரிப்பு பணி அனைத்தும் கோவையில் நடப்பதால் தள்ளாடும் ஆவின் நிறுவனம்? தனியார் மற்றும் பிற மாநில பால் விற்பனை அதிகரிப்பு
ADDED : ஆக 10, 2025 09:28 PM

ஊட்டி; ஊட்டி ஆவின் நிறுவனத்தின் பால் பதப்படுத்துவது, பால் பாக்கெட்டுகள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள், கோவையில் நடந்து வருவதால், பால் வினியோகிக்கும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், 94 பால் கொள்முதல் மையங்கள் உள்ளன.
இங்கு கடந்த காலங்களில், 200 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தினமும், 35 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தீவன விலை அதிகரிப்பு, வனப்பகுதியில் வறட்சி, மேய்ச்சல் நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கால்நடைகள் வளர்ப்பு குறைந்து விட்டது.
பால் கொள்முதல் குறைவு அதன்பின், நாள்தோறும், 14 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. 6,000 லிட்டர் வரை அந்தந்த பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டது. மீதமுள்ள பால் ஆவின் நிறுவனத்திற்கு கொண்டுவரப்பட்டு பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சில ஆண்டுகளாக, 12 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோவை ஆவின் நிறுவனத்திலிருந்து தினமும், 10 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்க, விண்ணப்பங்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். இத்திட்டம் ஆரம்ப கட்ட நிலையில் மட்டுமே உள்ளதால், உறுப்பினர்களான, விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சங்க உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், 'மாவட்டத்தில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள், அந்தந்த பகுதியில் உள்ள பால் கொள்முதல் மையத்திற்கு பாலை வினியோகம் செய்து வருகிறோம். தீவன விலை அதிகரிப்பு, மேய்ச்சல் நிலம் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால், எதிர்பார்த்த அளவு பால் உற்பத்தி செய்ய முடிவதில்லை. ஆவின் நிர்வாகமும், கடந்த காலங்களை போல, உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளை அளித்து ஊக்கப்படுத்தும் செயலில் ஈடுபடுவதில்லை.
இங்கு வாங்கும் பாலை, கோவை ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி அங்கு பதப்படுத்தி பால், தயிர் பாக்கெட் நீலகிரிக்கு கொண்டுவரப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி பிற மாநில பால் மற்றும் தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு ஏற்படுகிறது. எனவே, பால் உற்பத்தி செய்யும் மலை மாவட்ட விவசாயிகள், உள்ளூர் மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனத்தை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இது குறித்து கேட்க, ஆவின் அலுவலரை, மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றும் இணைப்பு கிடைக்கவில்லை.

