/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண்ணின் மைந்தர்களுக்கு மண் மட்டுமே மிச்சமா? கண்டு கொள்ளாத அதிகாரிகளால் தொடரும் அவலம்
/
மண்ணின் மைந்தர்களுக்கு மண் மட்டுமே மிச்சமா? கண்டு கொள்ளாத அதிகாரிகளால் தொடரும் அவலம்
மண்ணின் மைந்தர்களுக்கு மண் மட்டுமே மிச்சமா? கண்டு கொள்ளாத அதிகாரிகளால் தொடரும் அவலம்
மண்ணின் மைந்தர்களுக்கு மண் மட்டுமே மிச்சமா? கண்டு கொள்ளாத அதிகாரிகளால் தொடரும் அவலம்
ADDED : டிச 18, 2025 07:02 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே, சேரங்கோடு ஊராட்சியில், அடிப்படை தேவைகள் கிடைக்காமல், அழிவின் பிடியில் மண்ணின் மைந்தர்கள் வாழும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர், பணியர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில் காட்டுநாயக்கர், பணியர் சமுதாய பழங்குடியின மக்கள், அடிப்படை வசதிகளுக்காக தவிக்கும் அவலம் காலம், காலமாக தொடர்கிறது. அதில், பணி யர் சமுதாய பழங்குடியின மக்கள், 9,824 பேர் உள்ளனர். இவர்கள் வாழும் கிராமங்களில், அடிப்படை தேவைகளான, 'சாலை, நடைபாதை, குடிநீர், தெருவிளக்கு, குடியிருப்பு,' என, எந்த வசதியும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
உதாரணமாக, பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, வெட்டுவாடி பணியர் பழங்குடியினர் கிராமத்தில், எந்த வசதிகளும் இல்லாமல், 11 குடும்பங்கள் வாழ்ந்து வருவது, இதுவரை மாவட்ட நிர்வாகம் முதல் உள்ளூர் அதிகாரிகள் வரை தெரியாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்த கிராமத்தில், 11 குடும்பங்கள், பிளாஸ்டிக், சேலைகளை கொண்டு தடுப்பு அமைத்து குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு குடிசையில், ஐந்து முதல் ஏழு பேர் வரை வசித்து வரும் நிலையில், தற்போதைய பனி, மழை காலம் இவர்களின் உடல் நிலையை பாதிக்கிறது.
குடிநீர், நடைபாதையும் இல்லை இவர்களுக்கு சாலை அமைக்க, விவசாயி ஒருவர் தனது நிலத்தை ஒதுக்கி கொடுத்துள்ளார். ஆனால், சாலை மற்றும் நடைபாதை அமைக்கவில்லை. மின்சார வசதி மற்றும் கழிப்பிட வசதிகளும் இல்லை.
கிராமத்திற்கு மத்தியில் குடிநீர் தொட்டி இருந்தும், குழாய்களில் காற்று மட்டுமே வருகிறது. கூடலுார் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் பழங்குடியின மக்களுக்கு, 911 தொகுப்பு வீடுகள் ஒதுக்கப்பட்டு, சேரங்கோடு ஊராட்சியில் மட்டும், 423 தொகுப்பு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இது போன்ற கிராமங்கள் அதிகாரிகளின் கண்ணுக்கு தெரியவில்லை.
கிராம மக்கள் கூறுகையில், 'எங்களின் நிலை குறித்து, கிராமசபை கூட்டங்களில் தெரிவித்தும், எந்த பயனும் இல்லை. மண்ணின் மைந்தர்கள் என்ற பெயர் பெற்ற நாங்கள், இன்னும் சில காலங்களில் மண்ணோடு மண்ணாகி மறைந்து விடுவோமோ என்ற அச்சமே ஏற்பட்டுள்ளது,' என்றனர்.
தகவல் அறிந்த, பழங்குடியினர் நலத்துறை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சிவகுமார், வி.ஏ.ஓ.,ராஜேந்திரன் உள்ளிட்டோர் கிராமத்தை ஆய்வு செய்தனர்.
தாசில்தார் கூறுகையில், 'ஆய்வில், இப்பகுதியில், 11 குடும்பங்களுக்கு வீடு வசதி இல்லாதது தெரிய வந்தது.
மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி, குடியிருப்புகள், சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

