/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோர்ட் அமைய உள்ள இடத்தில் நீதிபதிகள் ஆய்வு
/
கோர்ட் அமைய உள்ள இடத்தில் நீதிபதிகள் ஆய்வு
ADDED : டிச 03, 2024 08:43 PM
கோத்தகிரி; கோத்தகிரியில் புதிய கோர்ட் அமைய உள்ள இடத்தை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
கோத்தகிரி கோர்ட், வருவாய் துறைக்கு சொந்தமான தரை தளத்தில் சிறிய அறையில், இடம் நெருக்கடியில் இயங்கி வருகிறது. இதனால், வக்கீல்கள், வழக்கு தொடர்பாக வரும் மக்கள் சிரமம் அடைவதுடன் ஆவணங்களை பராமரிப்பதிலும் சிரமம் அதிகமாக உள்ளது.
இதனால், 'புதிய கோர்ட் கட்டடம் கட்ட வேண்டும்' என, வக்கீல்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்படி, கோத்தகிரியில் சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இறுதியாக. கோத்தகிரி சக்திமலை பகுதியில், வருவாய் துறைக்கு சொந்தமான, நான்கு ஏக்கர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, கட்டடம் கட்ட உறுதி செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இடத்தை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சுரேஷ்குமார், சதீஷ்குமார், பவானி சுப்பராயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கட்டுமானம் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும், கோர்ட் அமைய உள்ள இடம் அருகே, நீதிபதிகள் ஓய்வு அறை, நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டுவது குறித்தும், அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் தண்ணீரை அதிகம் உறிஞ்சும் மரங்களை அகற்றவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து, வக்கீல்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆய்வின் போது, மாவட்ட நீதிபதிகள் லிங்கம், சந்திரசேகர், செந்தில்குமார் மற்றும் கோத்தகிரி ஜூடிசிஷியல் மாஜிஸ்திரேட் வனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக நீதிபதிகளை, கோத்தகிரி வக்கீல் சங்க தலைவர் பாலசுப்ரமணி, முன்னாள் அரசு வக்கீல் மணிக்குமார் உட்பட பலர் வரவேற்பு அளித்தனர். 'புதிய கோர்ட் கட்டட பணியை விரைந்து துவக்க ஆவண செய்ய வேண்டும்,' என, கோரிக்கை விடுத்தனர்.