/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்நாடக பக்தர்கள் சபரிமலைக்கு பாத யாத்திரை; முதுமலை சாலையில் பாதுகாப்பு பணியில் வனத்துறையினர்
/
கர்நாடக பக்தர்கள் சபரிமலைக்கு பாத யாத்திரை; முதுமலை சாலையில் பாதுகாப்பு பணியில் வனத்துறையினர்
கர்நாடக பக்தர்கள் சபரிமலைக்கு பாத யாத்திரை; முதுமலை சாலையில் பாதுகாப்பு பணியில் வனத்துறையினர்
கர்நாடக பக்தர்கள் சபரிமலைக்கு பாத யாத்திரை; முதுமலை சாலையில் பாதுகாப்பு பணியில் வனத்துறையினர்
ADDED : டிச 25, 2025 06:47 AM

கூடலுார்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்ட கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், முதுமலை சாலையை வன ஊழியர்கள் பாதுகாப்புடன் கடந்து செல்கின்றனர்.
கேரளாமாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல ஐயப்ப பக்தர்கள், கூடலுார் வழியாக பாத யாத்திரையாக சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு பாதயாத்திரையாக பல பக்தர்கள் கோவிலுக்கு செல்ல துவங்கி உள்ளனர்.
மைசூரு மாவட்டம், பாலியாபகுதியைச் சேர்ந்த, 25 ஐயப்பன் பக்தர்கள் குருசாமி பிரசந்தா தலைமையில், 18ம் தேதி பாத யாத்திரையை துவங்கினர். இவர்கள் நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு தமிழக- கர்நாடக எல்லையான கக்கனல்லாவை கடந்து, முதுமலை புலிகள் காப்பகம் வழியாக நடைப்பயணம் மேற்கொண்டனர்.
அப்போது, அரசின் உத்தரவின் பேரில், வன ஊழியர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக உடன் வந்தனர். இவர்கள், மாலை தொரப்பள்ளி வந்து, இரவு அங்குள்ள ராமர் கோவிலில் தங்கினர். அங்கிருந்து, நேற்று காலை பாத யாத்திரையை துவங்கிய ஐயப்ப பக்தர்கள் கூடலுார் எல்லையை கடந்து கேரளா சென்றனர்.
ஐயப்ப பக்தர்கள் பிரசன்னா, ரேவன்குமார் கூறுகையில், ''நாங்கள் மைசூரிலிருந்து, பந்திப்பூர் மற்றும் முதுமலை வனப்பகுதி சாலையை கடந்து செல்ல வன ஊழியர்கள் எங்களுக்கு உதவி வருகின்றனர். தினமும், 35 முதல் 50 பேர் பாதயாத்திரை செல்கிறோம். இரவில், கோவில்களில் தங்கி, பகல் நேரத்தில் பாத யாத்திரையை தொடர்கிறோம்,'' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலை வனப்பகுதியில் சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், பாத யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், வனத்துறைக்கு முறையாக தகவல் தெரிவித்து, பாதுகாப்புடன், கடந்து செல்ல வேண்டும். பாதுகாப்பின்றி வனப்பகுதியில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

