UPDATED : நவ 29, 2026 07:11 PM
ADDED : நவ 29, 2026 07:08 PM

பந்தலூர்: பணத்தை கொள்ளை அடிக்க வாகன உதவி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கேரளா மாநிலம் நாய்க்கட்டி பகுதியைச் சேர்ந்த, இருவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து, கேரளா மாநில பதிவு எண் கொண்ட காரில், 1.14 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். சேரம்பாடி அருகே சோலாடி சோதனை சாவடி எதிரில் இந்தக் காரை, பின்னால் வந்த வேறு ஒரு காரை மோத செய்த சிலர், பணத்துடன் அந்தக் காரையும், கார் டிரைவர் செரீப் என்பவரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்றனர்.
போலீசார் பின்தொடர்ந்து சென்ற நிலையில், கடத்தல் கும்பல் காரையும் செரீப்பையும் விட்டுவிட்டு தப்பியுள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார், வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கடத்தல் கும்பலுக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்து தகவல் தொடர்பு ஏற்படுத்தி வந்த, கேரளா திருச்சூர் பகுதியை சேர்ந்த செரீல் என்பவரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். கடத்தல் கும்பலுக்கு வாகன வசதி ஏற்படுத்திக் கொடுத்த திருச்சூர், பாப்பினி வட்டம் பகுதியைச் சேர்ந்த பிபின், 37 என்பவரையும் தமிழக போலீசார் கைது செய்தனர்.
