இந்திரா நகரில் தொடரும் சிறுத்தை ‘பீதி’: வனத்துறையை கண்டித்து போராட்டம்
இந்திரா நகரில் தொடரும் சிறுத்தை ‘பீதி’: வனத்துறையை கண்டித்து போராட்டம்
UPDATED : நவ 29, 2026 07:02 PM
ADDED : நவ 29, 2026 07:02 PM

குன்னூர்: சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, நடவடிக்கை எடுக்காமல் வனத்துறையினர் அலட்சியம் காட்டுவதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
குன்னூர் எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில், இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வப்போது ஊருக்குள் வரும் சிறுத்தைகள், வளர்ப்பு நாய்கள், ஆடுகள் மற்றும் மாடுகளை அடித்து இழுத்து செல்கிறது.
சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க கோரி, மனு நீதி நாள் முகாம், கிராம சபை கூட்டம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக மக்கள் நடமாடும் நேரத்திலும் இந்திரா நகர், எடப்பள்ளி, பந்துமை கிராமங்களில் சிறுத்தைகள் வர துவங்கியுள்ளது.
நேற்று அதிகாலை 3:00 மணியளவில் விஜயகுமார் என்பவரின் வீட்டின் வாசலில் புகுந்த சிறுத்தை நாயை தாக்கி முயன்ற போது நாய் காயத்துடன் தப்பியது.
மக்கள் சப்தம் எழுப்பியதால் ஓட்டம் பிடித்தது.
சம்பவம் குறித்து வனதுறையிடம் தெரிவித்தும் அலட்சியம் காட்டியதால், வனதுறையை கண்டித்து மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வனத்துறையிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என, உறுதியளித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.
