/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலா பயணி பலி
/
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலா பயணி பலி
ADDED : ஏப் 03, 2025 02:25 AM

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் ஊசிமலை காட்சி முனையை ஒட்டிய பாறை பகுதிக்கு சென்ற, கேரளா மாநில சுற்றுலா பயணி, தேனீக்கள் கொட்டியதில் பலியானார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஆசிப், ஜாபீர், சினான் ஆகியோர் நேற்று முன்தினம், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்து இரவு தங்கி உள்ளனர்.
நேற்று மதியம், 2:30 மணிக்கு கூடலுார் நோக்கி வந்த மூவரும், ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சி முனைக்கு சென்றனர்.
அங்கு தடை செய்யப்பட்ட பாறை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த தேன் கூட்டின் மீது கல் எறிந்ததால் தேனீக்கள் அவர்களை நோக்கி பறந்து வந்து கொட்டின. இதில், சினான் உயிர் தப்பிய நிலையில், ஆசிப், 23, ஜாபீர், 23, ஆகியோரை தேனீக்கள் கொட்டின.
அதில், காயமடைந்த ஆசிப்பை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கூடலுார் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அதேவேளையில், ஜாபீர் தேனீக்களிடம் சிக்கினார். அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வன ஊழியர்கள் அவரை மீட்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், தேனீக்கள் விரட்டியதால் மீட்க முடியவில்லை.
தீயணைப்பு வீரர்கள், வன ஊழியர்கள் கவச உடை அணிந்து, தீ பந்தங்களுடன் சென்று போராடி ஜாபீரை மீட்டனர். ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேனீக்கள் கொட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

