ADDED : ஜன 25, 2025 02:23 AM

கோத்தகிரி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த வாளையார் மனோஜ் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
அதே போல, சி.பி.சி.ஐ.டி., -- ஏ.டி.எஸ்.பி., முருகவேல் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் நேரில் வருகை புரிந்தனர். நீதிபதி முரளிதரன் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 'இன்டர்போல் எனும் சர்வதேச போலீஸ் விசாரணை நடந்து வருகிறது; புலன் விசாரணை மற்றும் சாட்சிகளிடம் நடக்கும் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் தேவைபடுகிறது' என, நீதிபதியிடம் அரசு வக்கீல்கள் கூறினர்.
இதையடுத்து, விசாரணையை பிப்., 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.