/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
10 ஆண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்படும் குந்தா நீரேற்று மின்திட்டப்பணி
/
10 ஆண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்படும் குந்தா நீரேற்று மின்திட்டப்பணி
10 ஆண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்படும் குந்தா நீரேற்று மின்திட்டப்பணி
10 ஆண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்படும் குந்தா நீரேற்று மின்திட்டப்பணி
ADDED : நவ 04, 2025 12:44 AM
ஊட்டி:  ஊட்டி அருகே, காட்டுகுப்பையில் நடந்து வரும் குந்தா நீரேற்று மின் திட்ட பணி கடந்த, 10 ஆண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருவதால் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே, குந்தா மின் வட்டத்துக்கு உட்பட்ட, 7வது மின் நிலையமான குந்தா நீரேற்று மின் நிலையம், உலக வங்கி நிதியுதவியுடன், 1,850 கோடி ரூபாயில் அமைக்க, 2013ல் திட்டமிடப்பட்டது. நான்கு பிரிவுகளில், தலா, 125 மெகாவாட் என, மொத்தம், 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 2015 ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த திட்டப்பணி, குந்தா ஆற்றின் குறுக்கே, அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளுக்கு மத்தியில், காட்டுக்குப்பை என்ற இடத்தில் நடந்து வருகிறது.
மின் வாரியம் சார்பில், 500 மீ., நீளத்துக்கு, டிராலியில் பொருட்களை எடுத்து செல்லும் வகையில், செங்குத்தான சுரங்கப்பாதை அமைக்கும் பணி; 1,500 மீ., நீளத்திற்கு பிரதான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றன.முதல் பிரிவுக்கான, 125 மெகாவாட் திட்டபணி, 2022 டிச.,  முடிக்க திட்டமிடப்பட்டும், இப்பணி இன்னும் நிறைவு பெறவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணியில் முழுமை பெறாதது குறித்து மாநில அரசுக்கு புகார் சென்றது. சென்னை மின்வாரிய தலைமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பணிகள் நடந்து வரும் இடம் அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலை, ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிர்வாக ரீதியான பிரச்னைகளால் பணிகள் தாமதமாகியுள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கூடுதல் ஆட்கள் நியமிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
இத்திட்டப்பணிகள் நிறைவு பெற்றால், நாள்தோறும், 500 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். இதனால், கூடுதலாக மின்சாரம் கிடைக்கும்.' என்றனர்.

