/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலை உணவு திட்டம் செயல்படுத்துவதில் சுணக்கம்:அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிக்கல்
/
காலை உணவு திட்டம் செயல்படுத்துவதில் சுணக்கம்:அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிக்கல்
காலை உணவு திட்டம் செயல்படுத்துவதில் சுணக்கம்:அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிக்கல்
காலை உணவு திட்டம் செயல்படுத்துவதில் சுணக்கம்:அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிக்கல்
ADDED : மே 02, 2024 11:10 PM
பெ.நா.பாளையம்:தமிழக அரசின் காலை உணவு திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளை நேரடியாக பார்வையிட்டு, அங்குள்ள வசதிகளை உறுதி செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகள்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடை நிற்றலை தவிர்க்கவும், தமிழக அரசு சார்பில், மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள, 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 1.14 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான காலை உணவு வழங்கும் நோக்கத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டம் தமிழகத்தின் அனைத்து நகர்ப்புற பகுதிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில், 31 ஆயிரத்து, 8 அரசு பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல், 5ம் வகுப்புகளில் படிக்கும் மேலும் சுமார், 2.50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் வரும் கல்வி ஆண்டு முதல், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்கள்
அதன்படி சமூகநலம் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
காலை உணவு வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில், மதிய உணவு திட்டத்திற்கு வழங்கப்பட்டது போன்று இத்திட்டத்திற்கும் பள்ளியிலேயே தனியாக உணவு பொருள்கள் வைப்பதற்கு, சமையல் செய்வதற்கு தேவையான இட வசதிகள் அமைத்து கொடுப்பதற்கும், இத்திட்டத்தை முழுமையாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு தேவையான முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தொடர்புடைய பள்ளிகளின் தாளாளர், தலைமை ஆசிரியருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு, மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து, ஒரு வாரத்திற்குள் அந்த பள்ளிகளை பார்வையிட்டு காலை உணவு திட்டம் செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, கல்வித்துறை கடந்த மார்ச் முதல் வாரத்தில் உத்தரவிட்டது.