/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் வக்கீல்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
ஊட்டியில் வக்கீல்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 28, 2025 11:37 PM

ஊட்டி , ; ஊட்டி கலெக்டர் அலுவலகம் எதிரே வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊட்டி பழைய கோர்ட் வளாகத்தில் தொழிலாளர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் உதவி கருவூல அலுவலர் தனது காரை அங்குள்ள கேட் முன்பு நிறுத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால், கோர்ட்டு ஊழியருக்கும் அந்த அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில், ஜி1 போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையும் நடந்துள்ளது.
இந்நிலையில், 'சம்பந்தப்பட்ட அதிகாரி மீதும், விசாரணையில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட எஸ்.ஐ., மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கோரி கலெக்டர் அலுவலகம் எதிரே நீலகிரி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் மகாதேவன் தலைமை வகித்தார். செயலாளர் மேனகா முன்னிலை வகித்தார். டவுன் டி.எஸ்.பி., நவீன் குமார் அங்கு வந்து, வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக கலெக்டர் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது.
வக்கீல்கள் சங்க துணை தலைவர் பாலநந்தகுமார் கூறுகையில்,''பிரச்னைக்கு காரணமான கருவூல உதவி அலுவலர் சரவணன், எஸ்.ஐ., நிஷாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக இரண்டு நாட்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது,'' என்றார்.