/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண்மையை போற்றுவோம்! செலவுகளை சமாளித்து, உறவுகளை பேணுகின்றனர்
/
பெண்மையை போற்றுவோம்! செலவுகளை சமாளித்து, உறவுகளை பேணுகின்றனர்
பெண்மையை போற்றுவோம்! செலவுகளை சமாளித்து, உறவுகளை பேணுகின்றனர்
பெண்மையை போற்றுவோம்! செலவுகளை சமாளித்து, உறவுகளை பேணுகின்றனர்
ADDED : மார் 09, 2024 07:27 AM

மேட்டுப்பாளையம் : நேற்று மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டே மகளிர் தினத்தை கொண்டாடினர் பெண் விவசாயிகள்.
நாங்கள் சம்பாதிப்பதால், எங்கள் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது, பேரன், பேத்திகளுக்கும் உதவ முடிகிறது என்கின்றனர் மகிழ்ச்சி பொங்க.
மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இச்சந்தையில் 78 கடைகள் உள்ளன. மேட்டுப்பாளையம், அன்னுார், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து, விவசாயிகள் காய்கறிகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த விவசாயிகளில் 30 பேர் பெண் விவசாயிகள்.
உழவர் சந்தையில் தங்களது வேளாண் விளை பொருட்களை வியாபாரம் செய்வதால், அவர்களது வாழ்வாதாரம் முன்னேறி உள்ளது என தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பெண் விவசாயிகள் கூறியதாவது :
வெண்ணிலா, 44, நான் சுமார் 8 ஆண்டுகளாக உழவர் சந்தையில் காய்கறிகளை விற்று வருகிறேன். ஊட்டி, குன்னுார், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கூட இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். பெண் விவசாயிகளுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கின்றனர். விவசாயத்தால் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது, என்றார்.
தனலட்சுமி, 44, மோத்தேபாளையம்
வீட்டு கடன், கல்வி கட்டணங்களை செலுத்த முடிகிறது. இதுதவிர சேமிக்கவும் முடிகிறது. நான் விவசாயம் செய்கிறேன், நான் சம்பாதிக்கிறேன் என கெத்துள்ளது. பெண் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் அனைத்து விதமான ஒத்துழைப்புகளும் வழங்கப்படுகின்றன.
நாகரத்தினம், 62, ராஜாபுரம்
விவசாயம் செய்வதற்கு முன் வாடகை வீட்டில் இருந்தோம். தற்போது சொந்த வீட்டில் உள்ளோம். அதிகாலையில் காய்கறிகளை கொண்டு வந்து உழவர் சந்தையில் விற்பனை செய்துவிட்டு, மதியம் வீட்டிற்கு செல்கிறோம்.
சின்னம்மாள், 70, தேக்கம்பட்டி
23 ஆண்டு களாக உழவர் சந்தையில் காய்கறிகளை விற்று வருகிறேன். தற்போது கீரை விவசாயம் செய்து வருகிறேன். அனைத்து வகை கீரைகளையும் இங்கு விற்பனை செய்து வருகிறேன். என்னுடைய பேரன், பேத்திக்கு என்னால் இயன்றதை செய்ய முடிகிறது.
தங்கமணி, 57, குத்தாரிபாளையம்
முன்பு அண்ணா மார்க்கெட்டில் கீரை விற்று வந்தேன். இங்கு அனைத்து வசதிகளுடன் கடை உள்ளது. இலவசமாக மின்னணு எடை இயந்திரம் தருகிறார்கள். மருத்துவ செலவுகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளையும் என்னாலேயே செய்து கொள்ள முடிகிறது. பணத்தேவையை என்னால் சரி செய்து கொள்ள முடிவதால் சந்தோஷமாக இருக்கிறேன்.
மேட்டுப்பாளையம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஷர்மிளா கூறியதாவது:
கிராமங்களுக்கு நேரடியாக சென்று, விவசாயிகளுக்கு உழவர் சந்தையின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். பெண் விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக பெண் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலர் தங்களது விளை நிலங்களை விவசாயம் செய்யாமல் வைத்திருந்தனர்.
அங்கு ஆய்வு மேற்கொண்டு விவசாயம் செய்ய ஊக்குவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம், வருங்காலத்தில் பெண் விவசாயிகள் இன்னும் அதிகரிப்பார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.' என்றார்.
மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் நேற்று மகளிர் தினவிழா, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஷர்மிளா தலைமையில் பெண் விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.---

