/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண்ணை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள்: மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
/
பெண்ணை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள்: மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
பெண்ணை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள்: மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
பெண்ணை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள்: மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
ADDED : அக் 31, 2025 11:56 PM

ஊட்டி: ஊட்டி அருகே பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கல்லட்டி அண்ணா நகர் பகுதி சேர்ந்த புஷ்பராஜ், மனைவி சோபனகுமாரி, 40, தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலசுப்பிரமணியன், இரு வீட்டாருக்கும் கழிவுநீர் செல்வதில் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு செப்., மாதம் 25ம் தேதி சோபனகுமாரி வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற போது, பாலசுப்ரமணியத்தின் மகன் மணிகண்டன், 32, சோபனகுமாரியிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த அரிவாள், இரும்பு கம்பியை எடுத்து தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த சோபனகுமாரியை அப்பகுதியினர் மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். கோமா நிலையில் இருந்த சோபனகுமாரி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனை வாயிலாக புதுமந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கு பதிவு செய்து, 2021 ம் ஆண்டு செப்., 26ம் தேதி மணிகண்டனை கைது செய்தனர். இவ்வழக்கு ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மணிகண்டன் மீது குற்றச்சாட்டு நிரூபணமானதால் ஆயுள் தண்டனை மற்றும் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக ஒரு லட்ச ரூபாய் அரசு வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் இழப்பீட்டை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.

