ADDED : ஆக 25, 2026 05:51 PM
மஞ்சூர்: மஞ்சூர் ஆதிபராசக்தி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலயங்களை ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
மஞ்சூரில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், 12ம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி பெருவிழா நடந்தது. விழாவை ஒட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, உலக அமைதி, குடும்ப நலன் மற்றும் பருவம் தவறாமல் மழை பெய்யவும், வறட்சி நீங்கி விவசாயம் செழிப்படைய வேண்டி கொட்டரக்கண்டி முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கஞ்சி கலய ஊர்வலத்தில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில் நிர்வாகிகள் சித்தம்மாள், சம்பூரணம் ஆகியோர் முன்னிலையில், மஞ்சூர், கரியமலை தாய் சோலை, தொட்டகம்பை, காந்திபுரம், மேல்குந்தா, எடக்காடு, கொட்டர கண்டி, குந்தாபாலம், பெங்கால் மட்டம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலயங்களை ஏந்தி ஊர்வலம் சென்றனர். அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.
