/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேலை வாய்ப்பின்றி பொருளாதார நெருக்கடியில்...பல குடும்பங்கள்! மலையில் இருந்து சமவெளிக்கு இடம் மாறும் அவலம்
/
வேலை வாய்ப்பின்றி பொருளாதார நெருக்கடியில்...பல குடும்பங்கள்! மலையில் இருந்து சமவெளிக்கு இடம் மாறும் அவலம்
வேலை வாய்ப்பின்றி பொருளாதார நெருக்கடியில்...பல குடும்பங்கள்! மலையில் இருந்து சமவெளிக்கு இடம் மாறும் அவலம்
வேலை வாய்ப்பின்றி பொருளாதார நெருக்கடியில்...பல குடும்பங்கள்! மலையில் இருந்து சமவெளிக்கு இடம் மாறும் அவலம்
ADDED : டிச 30, 2025 06:58 AM

ஊட்டி: நீலகிரியில் விவசாய தொழில், தொழிற்சாலைகள் படிப்படியாக நலிவடைந்து வருவதால், பல குடும்பங்கள் சமவெளி பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம், மலை காய்கறி விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட தொழில்களில், 'தோட்ட உரிமையாளர்கள், தோட்ட தொழிலாளர்கள்,' என, 60 சதவீத தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த, 20 ஆண்டுகளில் இந்த தொழில்கள் அனைத்தும் படிப்படியாக நலிவடைந்து வருகின்றன. மலை காய்கறி விவசாயம் இயற்கை சீற்றங்களின் போது பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. இத்தகைய காரணங்களால், இதை நம்பி இருந்த பெரும்பாலானவர்கள் இத்தொழிலை படிப்படியாக விட்டு வருகின்றனர். இம் மாவட்டத்தை பொறுத்த வரை, சுற்றுலாவை தவிர, மாற்று தொழில் ஏதும் இல்லாததால் பலர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
பிழைப்புக்காக இடப்பெயர்ச்சி குறிப்பாக, நீலகிரியில் முதுகெலும்பாக கருதப்படம் தேயிலை விவசாயத்தை காக்க, 25 ஆண்டுகளாக குறைந்தபட்ச ஆதார விலைக்கான பல கட்ட போராட்டம் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதனால், 65 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீலகிரியில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற, ஐ.டி.பார்க் போன்ற திட்டங்கள், 30 ஆண்டுகளாக வரவில்லை. சில திட்டங்கள் அறிவிப்புடன் நின்று விட்டன.
இது போன்ற காரணங்களால், மாவட்டத்தின் ஒட்டுமொத்த வருவாயும் சிதைந்து போனதால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இம்மாவட்டத்திலிருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்து சமவெளி பகுதிகளில் பணி நிமித்தமாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் வாக்காளர் பட்டியலும் மாற்றப்பட்டுள்ளன என்பது, சமீபத்தில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு மனம் வைக்குமா... மலை மாவட்ட விவசாய சங்க நிர்வாகி ராமன் கூறுகையில், ''நீலகிரியில் படித்த இளைஞர்களின் நலன் கருதி, மாநில அரசு ஊட்டி மற்றும் குன்னுார் பகுதிகளில் 'ஐடி' பார்க் திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்தது. அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு சென்றனர்.
இத்திட்டம் அறிவிப்போடு நின்றதால் படித்த இளைஞர்கள் பலர் எதிர்பார்ப்பில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. பலரும் சமவெளி பகுதிக்கு சென்றனர். அவர்களின் ஓட்டு சாவடியும் மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் நடந்த வாக்காளர் பட்டியலில் தெரிய வந்தது. விரைவில் தேர்தல் வர இருப்பதால், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மாநில அரசு கொண்டு வந்த திட்டங்கள் எப்போது நிறைவேறும் என்பதை சொல்வதற்கில்லை.
மத்திய அரசு இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் இங்கு, ஐ.டி., பார்க் கொண்டு வரவேண்டும். இனி விவசாயத்தில் எதிர்காலம் இல்லை என்ற சூழல் உள்ளது,'' என்றார்.

