ADDED : டிச 13, 2025 07:57 AM

கூடலுார்: மசினகுடி அருகே பராமரிப்பு பணிக்காக, மரவகண்டி அணையிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், கிராம மக்கள் ஆர்வமாய் மீன் பிடித்து சமைத்து உண்டனர்.
முதுமலை மசினகுடி அருகில், மரவகண்டி அணை மற்றும் நீர் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும், 750 கிலோ வாட் (0.75 மெகாவாட்) மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக அணையிலிருந்த தண்ணீரை நேற்று முன்தினம், வெளியேற்றினர். தொடர்ந்து, அணையில் தேங்கியிருந்த மிக குறைந்த தண்ணீரில் ஏராளமான மீன்கள் காணப்பட்டது. தகவல் அறிந்த மக்கள், அணையில் இறங்கி தேங்கிய தண்ணீரில் சாதா கெண்டை, ரோகு, கட்லா உள்ளிட்ட மீன் வகைகளை, சமையலுக்காக பிடித்து சென்றனர். சிலர், பெரியளவிலான மீன்களை, 200 ரூபாய் வரை விற்பனை செய்தனர். அங்கு ஐந்து கிலோவுக்கு மேல் எடையுள்ள மீன்களும் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மக்கள் கூறுகையில், 'மரவகண்டி அணையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீன்வள துறையினர், படகில் சென்று மீன் பிடித்து விற்பனை செய்தனர். வனத்துறை தடையால் இப்பணி நிறுத்தப்பட்டது. இதனால், மீன் கிடைப்பதில்லை. இந்நிலையில் பராமரிப்புக்காக அணை நீர் வெளியேற்றப்பட்டதால், அணையில் இருந்து மீன்களை பிடிக்க அனுமதிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின், அணையில் இருந்து நேரடியாக மீன் பிடித்து உட்கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கமும் உள்ளது,' என்றனர்.

