ADDED : செப் 08, 2025 09:35 PM

குன்னுார்: குன்னுார் பாய்ஸ் கம்பெனி, வேளாங்கண்ணி ஆலயத்தில் மாதா தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.
குன்னுார் பாய்ஸ்கம்பெனி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், ஆலய பங்கு குரு ஆரோக்கிய ராஜ், உதவி பங்கு கு ரு கிளமென்ட் ஆண்டனி உட்பட குருக்கள் முன்னிலையில், கூட்டு திருப்பலி, மறையுரை நடந்தன.
பெண் குழந்தைகள் தினத்தை வெளிப்படுத்தும் விதமாக, 15க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், மாதா போன்று வேடம் அணிந்து திருப்பலியில், பங்கேற்றனர். பெண் குழந்தைகள் நலன் மற்றும் திறன்கள் குறித்து தெரிவிக்கப்பட்டு, வாழ்வில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்து, கேக் வெட்டப்பட்டது. குழந்தைகளுக்கு கேக் வழங்கப்பட்டது.
இரவு, 6:30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா ஊர்வலம், கேட்டில் பவுண்ட், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை, அருவங்காடு வழியாக மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.
ஊர்வலத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையுடன் பங்கு மக்கள் பங்கேற்றனர். உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை, துணை தலைவர் சகாயராஜ், செயலாளர் ரிச்சர்டு, பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் உட்பட பலர் செய்திருந்தனர்.