ADDED : டிச 03, 2024 05:55 AM
கோத்தகிரி; கோத்தகிரி கோடநாட்டில் அதிகபட்ச, மழை பொழிவு பதிவாகி உள்ளது.
கோத்தகிரி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொட்டி தீர்த்த மழையால், ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டது. சில இடங்களில், சாலையோர சிறிய மரங்கள் விழுந்தன. உடனுக்குடன் மண் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டதால், பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
கோடநாட்டில் நேற்று காலை,8:00 மணி நிலவரம் படி, 71 மி.மீ., மழையளவு பதிவானது.
கோத்தகிரி நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, பாண்டியன் நகர் பகுதியில், அதிகாலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மழை காரணமாக, ஊட்டி, கூடலுார் மற்றும் கோத்தகிரி ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கோத்தகிரியில் நேற்று பகல் வானம் தெளிவாக காணப்பட்டது. மழை பாதிப்புகளை சமாளிக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.