ADDED : நவ 19, 2026 07:15 PM

ஊட்டி: ஊட்டியில் கடும் குளிர் நிலவியதால், அதிகாலை நேரத்தில் பல்வேறு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், வியாபாரிகள் தீ மூட்டி குளிரை போக்கினர்.
ஊட்டியில் கடந்த வாரம் நீர் பனி தென்பட்டது. இந்நிலையில், நேற்று (நவ.,18) காலை, ஊட்டி தாவரவியல் பூங்கா, வேலிவியூ, லவ்டேல், தலைக்குந்தா பகுதிகளில் உறை பனி தென்பட்டது. இதனால், ஊட்டியில் அதிகபட்சம், 13 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம், 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இந்நிலையில், இன்று (நவ.,19) காலை பனிமூட்டத்துடன் கடும் குளிர் நிலவியது. ஊட்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் உறைபனி தென்பட்டது. காலை நேரத்தில் மார்க்கெட் மற்றும் தோட்ட பணிக்கு செல்பவர்கள், வியாபாரிகள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். பள்ளி மாணவ, மாணவியர் வெம்மை ஆடை, கையுறை அணிந்து வாகனங்களில் சென்றனர்.
தாவரவியல் பூங்காவில் உள்ள புலிவெளியை புகைப்படம் எடுக்க, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வந்திருந்தனர். இதை தவிர, வேலிவியூ பள்ளதாக்கு பகுதிகளில் சூரிய உதய காட்சிகளை காண சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தலைக்குந்தா, காந்தள் பகுதிகளில் குறைந்த பட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியசாக இருந்தது.
