ADDED : அக் 09, 2024 10:03 PM

குன்னுார், : குன்னுாரில் மழையின் காரணமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வந்த மலை ரயில் ஒரு மணி நேரம் தாமதமானது.
குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைரயில் பாதையில் மண் சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு கன மழை பெய்த நிலையில், 6வது கி.மீ., பகுதியில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து. 210 சுற்றுலா பயணிகளுடன் ஊட்டிக்கு காலை, 7:10 மணிக்கு புறப்பட்ட மலை ரயில் ஆடர்லி அருகே நிறுத்தப்பட்டது. உடனடியாக ரயில்வே ஊழியர்கள் சீரமைத்த பிறகு ரயில் புறப்பட்டது. ரன்னிமேடும் பகுதியில் மீண்டும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இதனால், குன்னுாருக்கு காலை, 10:00 மணிக்கு வர வேண்டிய மலை ரயில் காலை, 11:10 மணிக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.