/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 25, 2024 12:13 AM

அன்னுார் : பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்து மேலைத்திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில், 57ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
21ம் தேதி இரவு வரை தினமும் பல்வேறு வாகனங்களில், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உலா வந்து அருள் பாலித்தார். கடந்த 22ம் தேதி காலை அம்மன், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நேற்று காலை 5:30 மணிக்கு, பெருமாள் தேருக்கு எழுந்தருளினார். மதியம் 12:10 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. முக்கிய பிரமுகர்கள், அறங்காவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக தேரின் மீது பழம், எலுமிச்சை, நிலக்கடலை ஆகியவற்றை வீசி வணங்கினர். கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர். ஜமாப் இசைக்கு ஏற்ப பக்தர்கள் நடனம் ஆடினர். தேரோடும் வீதி வழியாக சென்ற தேர் மதியம் 3:00 மணிக்கு நிலையை அடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று ( 25ம் தேதி) இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், 26 ஆம் தேதி இரவு சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. 27ம் தேதி கொடி இறக்குதலும், மஞ்சள் நீராட்டுதலும், மகா தீபாராதனையுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது.