/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகர் மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
/
நகர் மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
ADDED : செப் 30, 2024 10:58 PM

பந்தலுார் : நெல்லியாளம் நகராட்சி தலைவர்; துணைத் தலைவர் மீது, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து வெளிநடப்பு செய்தனர்.
பந்தலுார், நெல்லியாளம் நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கமிஷனர் முனியப்பன் வரவேற்றார். அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கவுன்சிலர் ஆலன் (தி.மு.க.,)
நகராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக, கமிஷனர், பொறியாளர், பணி மேற்பார்வையாளரை மாற்றும் வகையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் சுயநலமாக செயல்படுகின்றனர். இதனால், மக்கள் வளர்ச்சிக்கான, 5 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள் முடக்கப்பட்டுள்ளது.
ஏழு ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் கொண்டு வருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தலைவர் தன்னிச்சையாக மீண்டும் அவர்களுக்கு பணி வழங்க, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
தலைவர் மற்றும் துணைத்தலைவர் இணைந்து கட்டட அனுமதி, கதவு எண் பெறுவதற்கு லஞ்சம் பெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் இதற்கு ஆதாரங்கள் உள்ளது.
துணைத்தலைவர் நாகராஜ் தேவாலா பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வீட்டிற்கு கதவு எண் பெற்று தருவதாக கூறி, 46 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் புகார் உள்ளது. மக்களுக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள இயலாத நிலையில், தலைவர்; துணைத் தலைவரை மாற்றம் செய்ய, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆலன் பேசினார்.
இதை தொடர்ந்து, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, கவுன்சிலர் சேகர்; ஆலன் தலைமையில், தி.மு.க.,-காங்.,-மா.கம்யூ., கட்சிகளை சேர்ந்த, 12 கவுன்சிலர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். தலைவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. கவுன்சிலர் இரண்டு பேர் மட்டும் கூட்ட அறையில் இருந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.