/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மவுண்ட் ரோடு அவல நிலை; கண்டுகொள்ளாத போலீசார்
/
மவுண்ட் ரோடு அவல நிலை; கண்டுகொள்ளாத போலீசார்
ADDED : அக் 31, 2025 11:53 PM

குன்னூர்: குன்னூர் மவுண்ட் ரோட்டில், போலீசார் மற்றும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குன்னூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, மவுண்ட் ரோடு வழியாக அரசு மருத்துவமனை, பெட்போர்டு, சிம்ஸ்பார்க், பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும், சுற்றுலா வாடகை கார்கள் நிறுத்துவதாலும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மக்கள் ரோட்டில் நடந்து செல்கின்றனர். நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இவற்றை அகற்றி, நடைபாதை வசதியை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு பல முறை புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பீக் ஹவர்ஸ் நேரங்களில் போலீசார் மற்றும் அரசியல்வாதிகள் வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நாட்களாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு தெரியாமலேயே மொபைலில் படம் பிடித்து அபராதம் விதிக்கும் போலீசார், இங்கு வாகன நெரிசலை ஏற்படுத்துவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது தொடர்பாக லஞ்சம் இல்லாத நீலகிரி இயக்க ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், மவுண்ட் ரோட்டில் நிறுத்தும் சுற்றுலா வாகனங்கள் தனியாக வேறு இடத்திற்கு மாற்றவும், அண்ணா சிலையை காந்தி சிலை அருகில் அல்லது சாமண்ணா பார்க் அருகே மாற்றவும் வேண்டும். மவுண்ட் ரோட்டில் நடைபாதை அமைக்க கலெக்டரிடம் பல முறை தெரிவித்தும், போலீசார் மற்றும் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு இல்லாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, சர்வே, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய, தனி குழு ஏற்படுத்தி, தீர்வு காண, கலெக்டர் உத்தரவிட்டும், இதுவரை தீர்வு காணப்படவில்லை, என்றார்.

