/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை மாவட்ட வேட்டை தடுப்பு காவலர்... பணியில் பாதுகாப்பில்லை! ஊதிய௴ உயர்வு இல்லாததால் திணறல்
/
மலை மாவட்ட வேட்டை தடுப்பு காவலர்... பணியில் பாதுகாப்பில்லை! ஊதிய௴ உயர்வு இல்லாததால் திணறல்
மலை மாவட்ட வேட்டை தடுப்பு காவலர்... பணியில் பாதுகாப்பில்லை! ஊதிய௴ உயர்வு இல்லாததால் திணறல்
மலை மாவட்ட வேட்டை தடுப்பு காவலர்... பணியில் பாதுகாப்பில்லை! ஊதிய௴ உயர்வு இல்லாததால் திணறல்
ADDED : ஜன 15, 2024 10:51 PM
குன்னுார்:குன்னுார் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் யானைகளை விரட்டும் வேட்டை
தடுப்பு காவலர்கள் மிகுந்த சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
தமிழக வனத்துறையில் வன விலங்குகளை வேட்டையிலிருந்து பாதுகாக்கவும், மரங்கள் வெட்டுவதை தடுக்கவும், வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
வனத்துறையில், 1,119 வேட்டை தடுப்பு காவலர்கள், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வந்த நிலையில் கடந்த, 2019ல் 2,500 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன்பின் கடந்த நான்கு ஆண்டுகளாக வேட்டை தடுப்பு காவலர்களுக்கு எந்த சம்பள உயர்வும் அளிக்கப்படவில்லை.
அதில், தற்போது, 10 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பவர்களும் இதே பணியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பதவி உயர்வு என்பது இல்லாமல் உள்ளது.
இந்த பணியில் பழங்குடியினர் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். மலை மாவட்டத்தில் வனப்பகுதிகள், உயரமான மலைகளில் ஏறி, இறங்கி பணியாற்றும் இவர்களுக்கு, அட்டை பூச்சி உட்பட விஷ பூச்சி கடி என்பது தொடர்கிறது. தேவையான மருத்துவ முகாம்கள் நடத்தி மருந்துகள் வழங்கப்படுவதில்லை.
வனவிலங்கு கண்காணிப்பு
யானை, கரடி, சிறுத்தை என வனவிலங்குகளை கண்காணிக்கும் இவர்களுக்கு, 'அதன் நடமாட்ட பகுதி, இடம் பெயர்வு,' என, அனைத்தும் தெரியும். விலங்குகள் வரும் பாதையில் கண்காணித்து, குடியிருப்புகளுக்கு வராமல் தடுக்கின்றனர்.
சில நேரங்களில், விலங்குகளை விரட்டும் போது வேட்டை தடுப்பு காவலர்களை துரத்தி அவர்களுக்கு காயம் ஏற்படுகிறது.
இதற்கான சிகிச்சை அளிப்பதிலும், நிவாரணம் வழங்குவதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரவில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபடும் வகையில், 'டார்ச் லைட்'களும் போதிய அளவில் இல்லை.
எனவே, வேட்டை தடுப்பு காவலர்களுக்கு சம்பள உயர்வு அளித்து வேட்டை தடுப்புக்கு கூடுதல் உபகரணங்கள் வழங்க வேண்டும்.
நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில்,''வேட்டை தடுப்பு காவலர்களுக்கு சம்பள உயர்வு குறித்து அரசு பரிசீலனை செய்யும். தற்போது வனத்துறையினருக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், அவர்களும் பங்கேற்கலாம். குன்னுாரில் விரைவில் மருத்துவ முகாம் நடத்தப்படும். காயமடைந்த வேட்டை தடுப்பு காவலருக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.