/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பகுதிகளை மிரட்டும் மேக வெடிப்பு; பேரழிவு தடுக்க இயற்கை வளங்கள் பாதுகாப்பு அவசியம்
/
மலை பகுதிகளை மிரட்டும் மேக வெடிப்பு; பேரழிவு தடுக்க இயற்கை வளங்கள் பாதுகாப்பு அவசியம்
மலை பகுதிகளை மிரட்டும் மேக வெடிப்பு; பேரழிவு தடுக்க இயற்கை வளங்கள் பாதுகாப்பு அவசியம்
மலை பகுதிகளை மிரட்டும் மேக வெடிப்பு; பேரழிவு தடுக்க இயற்கை வளங்கள் பாதுகாப்பு அவசியம்
ADDED : டிச 22, 2025 05:56 AM
குன்னுார்: குன்னுார் சற்குரு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில், சுற்றுசூழல் கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் நவநீத கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியை பிரமிளா வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜு பேசியதாவது:
உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேச பகுதிகளில்ஏற்பட்ட மேக வெடிப்பால் அதீத மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டு, பேரழிவு நிகழ்ந்தது. 200க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அழிந்தன. கடந்த ஆண்டு கேரளாவில். மேக வெடிப்பால் பேரிடர் ஏற்பட்டது.
பேரிடரை விஞ்ஞானிகளால் முன்கூட்டியே அறிய முடிவதில்லை. அனைத்து வகை மேக கூட்டங்களால் மேக வெடிப்பு ஏற்படுவதில்லை. பேரளவு நீர் துளிகள் நிறைந்த 'குமுலஸ் நிம்பஸ்' என்ற மேக வடிவத்தின் விளைவாக பெருமளவு மழை பெய்கிறது.
மிக குறைந்த நேரத்தில், மிக குறைந்த பரப்பளவு பகுதியில் மழை நீரை கொட்டி தீர்ப்பது மேக வெடிப்பு. ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில், 10 முதல் 20 சதுர கி.மீ. பரப்பளவில் 100 மி.மீ., அளவில் மழையை கொட்டும்.
இது மற்ற மழை பொழிவு போன்றது அல்ல. இதுபோன்ற மேக வெடிப்புகள் காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படுகிறது.
வங்கக்கடல், அரபிகடல் பகுதிகளில் உருவாகும் வெப்ப காற்று, நீர்துளிகளை பெருமளவில் உள்ளடக்கியது. இது மேல் நோக்கி சென்று, மலை பகுதிகளில் வீசும் குளிர் காற்று பட்டவுடன் மழையாக பெய்யும். இது இயல்பான நிகழ்வு. காலநிலை மாற்றத்தால், இந்த மேக கூட்டத்தை வெப்ப காற்று மழை பெய்ய விடாமல் மீண்டும் மேல்நோக்கி தள்ளுகிறது.
இதனால் ஏராளமான நீர் துளிகளை கொண்ட மேக கூட்டம், இமயமலை போன்ற உயர்ந்த மலைகளில் மோதி மேக வெடிப்பாக மாறுகிறது. இமயமலை பகுதிகளில் வளர்ச்சியின் பெயரால், சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாத இடங்களில் எல்லாம் கட்டடங்கள் கட்டப்பட்டு, கான்கிரீட் காடுகளாக மாற்றப்படுகிறது. பெரு மழை ஏற்படும் போது, தாங்கும் தன்மையற்ற நிலப்பகுதி சரிந்து பேரழிவை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற பேரழிவு நீலகிரி மாவட்டத்திலும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டது. வருங்காலத்தில் இது போன்ற பேரிடர்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், பேரழிவு வரும் முன் காக்க, அதீத கட்டடங்கள் கட்டி இயற்கை வளங்கள் அழிப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு ஆசிரியர் ராஜு பேசினார். காலநிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றி, காணொளி காட்சியில் விளக்கப்பட்டது.

