/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுப்பு இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
/
தடுப்பு இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : டிச 22, 2025 05:56 AM
கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு -கக்குச்சி இடையே, சாலையில் மழை நீர் கால்வாயில் தடுப்புகள் இல்லாததால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.
கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் இருந்து, கக்குச்சி மற்றும் தும்மனட்டி வழித்தடத்தில், 'அரசு பஸ்கள், தேயிலை தொழிற்சாலை வாகனங்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள்,' என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், இச்சாலை போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. விரிவு படுத்தப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ள சாலையில், தேவையான இடங்களில் மழை நீர் வழிந்தோட கால்வாய்கள் (மோரி) அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், மழைநீர் கால்வாய்களில் தடுப்புகள் உடைந்து, கால்வாய் தெரியாத அளவுக்கு, காட்டு செடிகள் முளைத்துள்ளன. குறிப்பாக, கட்ட பெட்டு ஆரம்ப சுகாதார மையம் அமைந்துள்ள குடிமனை பகுதியில் மூன்று கால்வாய்களில் தடுப்புகள் இல்லை.
இதனால், எதிரில் வரும் வாகனங்களுக்கு ஒதுங்கும்போது, கால்வாய் குழி தெரியாத நிலையில், டிரைவர்கள் வாகனங்களை இயக்குவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, விபத்தை தவிர்க்க, நெடுஞ்சாலை துறையினர் குறிப்பிட்ட கால்வாய்களில் தடுப்பு அமைக்க வேண்டும்.

